ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர்-14 காலை தேனியில் துவங்கியது. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன் முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர்.
“பத்மவிபூசன் இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரே படத்தில் இணைந்து இசையமைப்பது இதுவே முதல் முறை, அதுவும் அது என் படத்தில் நடப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். மேலும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைவது மிகவும் சிறப்பான விஷயம். குறிப்பாக, இந்த கூட்டணி தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற அரிய பொக்கிஷங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். YSR ஃபிலிம்ஸ் முதல் தயாரிப்பான ப்யார் பிரேமா காதல் கடந்த ஆண்டு இதே நாளில் தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார் தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக்.
YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். தர்மதுரை படத்துக்கு பிறகு சீனு ராமசாமி-விஜய் சேதுபதி-யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியுடன் மீண்டும் இணைகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்.

Comments are closed.