நடிகர்கள் : லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா ஜெர்மையா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகரன், விடிவி கணேஷ், இயல், ஆதித்யா கதிர்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : வெங்கடேஷ்.எஸ்
இயக்கம் : ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
தயாரிப்பு : லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்
லெஜண்ட் சரவணன் நடிப்பில், இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில், பிரமாண்டமான ஆக்ஷன் படமாக வெளியாகியிருக்கும் ‘லீடர்’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
மகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கும் நாயகன் லெஜண்ட் சரவணன், சாதாரண கார் மெக்கானிக்காக தூத்துக்குடியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் மூலம் அவரது மகளுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையை தீர்த்து தன் மகளை காப்பாற்றும் நடவடிக்கையில் சரவணன் ஈடுபடும் போது, அவர் பற்றிய பல உண்மைகளை காவல்துறை உயர் அதிகாரி ஷாம் கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும், லெஜண்ட் சரவணன் யார் ? என்பதை அதிரடியாக சொல்வதே ‘லீடர்’ படத்தின் மீதிக்கதை.
அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஹீரோவின் அதிரடியான மறுபக்கம், என்ற ரீதியில் பல கதைகள் வந்திருந்தாலும், அவற்றை சொல்லும் விதம் அந்த படங்களை மிகப்பெரிய வெற்றிப் படங்களாக்கியிருக்கிறது. அந்த வகையில், தான் எடுத்துக் கொண்ட கதையை முழுமையான ஆக்ஷன் படமாகவும், அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்ததில் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில், மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட் சரவணன், இரண்டாவது படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சாதுவாக அறிமுகமாகி தனது ஒவ்வொரு அதிரடியான செயல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருப்பவர், தோற்றம் மற்றும் உடல் மொழியில் அக்மார்க் ஆக்ஷன் ஹீரோவாக பளிச்சிடுகிறார். மகளின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர், தற்போதைய கோலிவுட் மாஸ் ஹீரோக்களே மிரளும் வகையில், தன் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராஜ்புத்துக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதையின் திருப்பத்திற்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா ஜெர்மையா, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கும் ஷாம், வில்லனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருப்பதோடு, அவர்களது திரை இருப்பு படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
பாகுபலி பிரபாகரன், லால், விடிவி கணேஷ், அமிர்தா ஐயர், சிறுமி இயல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.எஸ், ஹீரோவையும், அவரது சண்டைக்காட்சிகளையும் படமாக்கிய விதம் ரசிக்க கூடிய விதத்தில் இருக்கிறது. காட்சிகளின் தரத்தால் படத்தின் செலவுகளை திரையில் பிரமாண்டமாக தெரிய வைத்திருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பயணித்திருப்பதோடு, அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும், அனைத்தையும் ரசிக்கும்படி அளவான சத்தத்தோடு கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவின் பணி படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோவை எப்படி காட்டினால், மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை மிக சரியாக கணித்து காட்சிகளை கூர்மையாக வெட்டி, தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கான பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
லெஜன் சரவணனை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுவதோடு, அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக காட்சிகளை மிக சிறப்பாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில், இறுதிவரை திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதற்காக வைத்த திருப்பங்கள் ஆச்சரியப்பட வைக்கிறது.
அப்பா – மகள் செண்டிமெண்ட் மூலம் ஒரு ஆக்ஷன் படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில், தூத்துக்குடியில் கதையை ஆரம்பித்து, இந்தியாவை கடந்து, சர்வதேச அளவில் பயணிக்க வைத்து விதம், படத்திற்கு கூடுதல் பிரமாண்டத்தை கொடுத்திருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு பழக்கப்பட்ட கதை என்றாலும் அதை தனது தனித்துவமான இயக்கத்தின் மூலம் விறுவிறுப்பான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்து, இந்த ‘லீடர்’-ரை மக்கள் கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்.
ரேட்டிங் 4/5
Comments are closed.