’குலசாமி’ விமர்சனம்

246

நடிகர்கள் : விமல், தன்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், சூர்யா, முத்துபாண்டி
இசை : வி.எம்.மஹாலிங்கம்
ஒளிப்பதிவு : வைட் அங்கிள் ரவிசங்கர்
இயக்கம் : சரவணசக்தி
தயாரிப்பு : பி.இளையராஜா, வி.கார்த்திகேயன், வி.முத்துகுமார்

நாயகன் விமலின் தங்கை கற்பழித்து கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீஸ் திணற, விமலும் கொலையாளி யார்? என்று தேடி வருகிறார். இதற்கிடையே பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட அந்த கொலையாளியை பிடிப்பதில் போலீஸ் தீவிரம் காட்டி வர, பாலியல் வன்கொடுமை புரியும் குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை வழங்கும் அந்த மர்ம நபர் யார்?, விமல் தேடி வந்த கொலைகாரன் பிடிபட்டாரா? இல்லையா?, அவருடைய தங்கைக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆக்‌ஷன் பாணியில் சொல்வது தான் ‘குலசாமி’.

முதல் முறையாக ஆக்‌ஷன் படத்தில் நடித்திருக்கும் விமல், தனது வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், 1980-களில் நடிக்க வேண்டிய ஆக்‌ஷன் படத்தில் இப்போது நடித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம் என்றாலும் அவரை அறைகுறையாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனா, கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் வினோதினி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், வில்லனாக நடித்திருக்கும் சூர்யா என படத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தின் காட்சிகளை சீரியல் போல் படமாக்கியதை தவிர்த்திருக்கலாம்.

வி.எம்.மஹாலிங்கத்தின் இசையமைப்பில் ஒரு பாடல் மட்டும் கேட்கும் ரகமாக இருந்தாலும் பழைய ரகமாகவே இருக்கிறது. பின்னணி இசை என்ற பெயரில் அதிகபடியான சத்தம் கேட்கிறதே தவிர அவை காட்சிகளுக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.

நாயகனை மையப்படுத்திய ஒரு ஆக்‌ஷன் படத்தை, நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, கதையின் முக்கிய சஸ்பென்ஸை படத்தின் துவக்கத்திலேயே ரசிகர்கள் யூகிக்கும்படி பணியாற்றியிருக்கிறார்.

நடிக விஜய் சேதுபதி தான் வசனம் எழுதியிருக்கிறார். ஆனால், அவருடைய வசனங்கள் எதுவும் மனதில் நிற்கும்படி இல்லை.

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்குவதை விட, கொடூரமான மரண தண்டனை தான் சரியானது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ’குட்டி புலி’ சரவணசக்தி, அதை மக்கள் ரசிக்கும் ஆக்‌ஷன் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சரவணசக்தி, அதை கமர்ஷியலாக கொடுத்திருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை தொய்வு ஏற்படும்படி அமைத்திருப்பது படத்திற்கு மைனஸாக அமைந்திருக்கிறது.

இருந்தாலும், சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை சொன்னதற்காக ’குலசாமி’-யை ஒரு முறை பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5

Comments are closed.