அதிரடி திட்டம் கொண்டுவந்தார் கேயார் ; தயாரிப்பாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் கிடைக்கும்

176

இன்றைய சூழலில் ஒரு படம் வெளியாகி தியேட்டர்களில் திரையிட்டு லாபம் பார்ப்பது என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது. ஆடியோ, சாட்டிலைட் உரிமை என விற்றாலும் அதில் போட்ட முதலுக்கு பாதி தேறினாலே ஆச்சர்யம். அப்படியென்றால் கோடிகளை கொட்டி படம் எடுக்கவரும் தயாரிப்பாளர்களின் நிலை..?

படம் ஓடினால் அடுத்து படம் எடுக்க வருவார்கள்.. படம் சரியாக போகாமல் நட்டத்தை தந்தால்..? தயாரிப்பாளரை தவிர மற்றவர்கள் தங்களது அடுத்த வேலைகளை பார்க்க போய்விடுவார்கள். ஆனால் கையில் இருந்த பணத்தை எல்லாம் கொட்டி படத்தை எடுத்த அந்த தயாரிப்பாளரின் கதி..?

பணம் இருப்பவர்களுக்கு சரி.. ஆனால் மற்றவர்கள் காலம் எல்லாம் வறுமையிலே வாடவேண்டியதுதானா..? துரதிர்ஷ்டவசமாக இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் இந்த விஷயத்தில் துளிகூட கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உறைய வைக்கும் உண்மை.

ஆனால் இந்த அவலத்திற்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கும் முட்யற்சியாக முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறார் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பொறுப்பேற்று இருக்கும் கேயார். எப்படி..? கேபிள் டிவிக்கள் மூலம் ஒளிபரப்பாகும் திரைப்பட பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், முன்னோட்டங்கள் மற்றும் திரையுலக விழாக்கள் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகை சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படவேண்டும். இது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள விதி. இதை ஒவ்வொரு திரையுலக விழாக்களில் மேடை கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் வலியுறுத்தி வந்தார் கேயார். ஆனால் ஏற்கனவே இருந்த தலைமை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

ஆனால் இத்தனை வருடங்களாக பொறுப்பில் இருந்தவர்கள் இப்படி கிடைத்த பணத்தை உரியவர்களுக்கு சென்று சேராமல் ஒரு சிலரே அனுபவிக்கும் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தது. இதை கண்டுபிடித்த கேயாரின் தலைமையிலான நிர்வாகம். அதனால் தற்போது சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருப்பதுடன் தயாரிப்பாளர்களின் எதிர்கால பாதுகாப்பு நலன் கருதி சில புதிய திட்டங்களையும் கொண்டுவந்துள்ளனர்.

இனி எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பாரபட்சமின்றி சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு அதில் கேபிள் ஒளிபரப்பு மூலமாக கிடைக்கும் தொகையிலிருந்து மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் அதில் சேரும்படி ஒரு திட்டத்தை தொடங்கிவைத்துள்ளது கேயார் தலைமையிலான நிர்வாகம்..

இதன் மூலம் இனி எந்த தயாரிப்பாளரும் காலம் முழுதும் வறுமையில் வாடவோ, கஷ்டப்படவோ தேவையில்லை என கூறியுள்ளார் கேயார். இது தயாரிப்பாளர்களை மயக்க, வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே அறிவிக்கப்பட்ட திட்டமல்ல என்பதை கேயாரும் அவருடன் இணைந்து செயல்படும் தயாரிப்பாளர் சங்க செயலாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் முயற்சியால் உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குப்புத்தகம், செக்புக் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றை வழங்கியதன் மூலம் நிரூபித்துவிட்டனர். “இதனை பெற்றுக்கொண்ட அனைவரும் இந்த திட்டத்தை வாழ்த்திச்சென்றது எங்களை இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த ஊக்கம் கொடுப்பதாக இருக்கிறது” என்கிறார் கேயார். நல்லது தொடர்ந்து நடக்க வாழ்த்துவோம்.

Comments are closed.