’கண்ணகி’ விமர்சனம்

203

நடிகர்கள் : கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, மெளனிகா, மயில்சாமி, யஷ்வந்த் கிஷோர், வெற்றி, ஆதேஷ் சுதாகர்
இசை : ஷான் ரகுமான்
ஒளிப்பதிவு : ராம்ஜி
இயக்கம் : யஷ்வந்த் கிஷோர்
தயாரிப்பு : ஜெ.தனுஷ், எம்.கணேஷ்

திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மு அபிராமிக்கு சில காரணங்களால் திருமணம் தடைப்பட்டு வருகிறது. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஷாலின் சோயா, லிவிங் டூ கெதர் முறையில் ஓரு ஆணுடன் வாழ்ந்து வருகிறார். காதலனால் கர்ப்பமடைந்த கீர்த்தி பாண்டியன், கருவை கலைக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு வருகிறார். கணவருடைய கட்டாயத்தால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும் வித்யா பிரதீப் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். இப்படி நான்கு பெண்களும் ஒவ்வொரு பிரச்சனையோடு வாழ்ந்து வரும் நிலையில், இவர்கள் பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்கள், இவர்களுடைய இந்த வாழ்க்கை பயணம் எப்படி செல்கிறது, எதில் போய் முடிகிறது, என்பதே படத்தின் மீதிக்கதை.

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகிய நான்கு பேரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனை என்ற ரீதியில் கதை நகர்ந்தாலும், அப்பெண்களின் பிரச்சனைகளை ரசிகர்களிடம் மிக நேர்த்தியாக கடத்தும் வகையில் நான்கு நடிகைகளும் நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

யஷ்வந்த் கிஷோர், வெற்றி, மயில்சாமி, ஆதேஷ் சுதாகர், மெளனிகா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்து படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதோடு, கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.

ஷான் ரகுமானின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், பெண்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பல சமூகம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற ஒரு கோணத்தில் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் யஷ்வந்த் கிஷோர், திரக்கதை மற்றும் காட்சிகளை மிக இயல்பாக வடிவமைத்து ரசிக்க வைத்திருப்பதோடு, வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.