ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் கருத்து சுதந்திரம் பற்றி கமல் ஆற்றிய உரை..!

201

kamal in horward university
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியாவில் இருந்து பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பல தலைப்புகளில் பேசினார்கள்.. நமது பத்மஸ்ரீ கமல் கருத்து சுதந்திரம் என்கிற தலைப்பில் நீண்டதொரு உரையை ஆற்றியுள்ளார். அதன் சாராம்சத்தை மட்டும் உங்களுக்காக கொடுத்துள்ளோம்..

கருத்துச் சுதந்திரம் என்ற தலைப்பை நான்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னை இங்கு அழைத்தவர்களுக்கும் அதில் நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு இந்தச் சுதந்திரத்தை அளித்தவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

கமல் ஹாசனின் பிரச்சினைதான் என்ன? தான் அச்சுறுத்தப்பட்டது போல் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசத் தேர்ந்தெடுக்க அவனுக்கு என்ன குறை இருக்கிறது? அதிலும் சுதந்திரங்கள் தழைக்கும், குறிப்பாக, பேச்சுச் சுதந்திரம் சிறப்பிக்கப்படும் ஜனநாயகத்தின் கோட்டை, அமெரிக்காவில் அதைப் பேச வேண்டிய அவசியம் என்ன?

இங்கு நீங்கள் நினைத்ததைச் சொல்ல முடியும், ராப் பாட முடியும், கெட்ட வார்த்தை பேச முடியும், உங்கள் கல்வியைக் காட்டிக் கொள்ள கௌரவமான மொழியையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட சுதந்திரம் இங்கு இருக்கிறது. இதுவா கருத்துச் சுதந்திரம்? இது போன்ற ஒரு சுதந்திரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லண்டனில் ஹைட் பார்க் வழங்கியிருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படும் அரண் ஜனநாயகம் மட்டும்தான் என்று கொண்டாடப்படுகிறது. ஆனால், ஜனநாயகம் அப்படியொன்றும் அப்பழுக்கற்ற அரசியல் அமைப்பு அல்ல என்று சொல்லும்போது என் கருத்து கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கொதிக்கிறார்கள், ஆத்திரப்படுகிறார்கள்.. சிவப்பு என் அரசியலின் நிறம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அது உண்மையல்ல என்பதை நான் இங்கு சொல்ல வேண்டும். சமூகத்தில் நிலவும் அத்தனை நோய்களுக்கும் இறுதி தீர்வு, ஒரே தீர்வு என்று ஜனநாயகமோ, கம்யூனிசமோ, பாசிசமோ அல்லது எந்த ஒரு இசமுமோ இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

ஜனநாயகத்தில் மட்டுமே கருத்துச் சுதந்திரம் இருக்க முடியும் என்ற உண்மையை நீ மறுக்க முடியுமா என்று என்னிடம் கடுமையாகக் கேட்கப்பட்டது உண்டு. ஆனால் வங்கி லாக்கரில் வைக்கப்பட்ட பணம் போல் சுதந்திரத்தைப் பொத்திப் பாதுகாக்க முடியாது. ஆபத்து காலத்தில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் வரை வட்டி போட்டு வளரட்டும் என்று அதைப் பூட்டி வைக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் எச்சரிககையாக இருந்தாக வேண்டும்.

நுட்பமான முறையில் நம்மைக் கட்டுப்படுத்தும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக எப்போதும் காவல் நிற்கும் மிகப்பெரிய ஒரு சமூகத்தின் உறுப்பினன் நான். அதனால்தான் கலாசாரத்தின் பெயராலும் அரசின் பெயராலும் பிற குரல்களையும் திரைப்படங்களையும் பிறர் அறியாத வகையில் தணிக்கை செய்யும் திரைப்பட தணிக்கை அமைப்பின் செயல்பாட்டைச் சீர்திருத்தும் வகையில் பரிந்துரைகள் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியில் பணியாற்றும் வாய்ப்பை நான் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் இங்கே ஜனநாயகத்தை விமரிசிக்கவோ கம்யூனிசத்தையோ சோஷலிசத்தையோ போற்றிப் புகழவோ வரவில்லை. ஊடகங்களின் வழியாகவும் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் உள்ள திறந்த உள்ளங்களின் மூலமாகவும் கருத்துச் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு நாம் ஜனநாயகம் என்றால் தானாகவே அது கருத்துச் சுதந்திரம் என்று பொருள்படுகிறது என்ற நினைப்பில் கவனமில்லாமல் இருந்து விடக்கூடாது என்று பதிவு செய்யவே நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இங்கு நான் என் தேசத்தைக் குறை சொல்வதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நூற்றாண்டுகளாய் நிலவும் ஜனநாயகத்துடன் ஒப்பிடும்போது இந்திய ஜனநாயகம் மிகவும் இளையது. ஆனாலும்கூட அமெரிக்க ஜனநாயக அமைப்பில் நடைமுறைக்கு வருவதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அத்தனை குடிமக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு விட்டது.

இந்தியா மட்டுமில்லை, உலகமே மாறிக் கொண்டிருக்கிறது. இனி வரும் உலகம் புதிய சவால்களை எதிர்கொண்டு புதிய வாய்ப்புகளை காணப் போகிறது. என் வாழ்நாளில் எல்லைக் கோடுகள் மங்கி மறையும் என்றுகூட என்னால் நம்பிக்கை கொள்ள முடிகிறது. நம்மைக் கட்டுப்படுத்தும் குட்டிச்சுவர்களைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர்களாக இல்லாமல் நாம் அனைவரும் மெல்ல, ஆனால் உண்மையாகவே உலகக் குடிமகன்களாய் ஆவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

கருத்துச் சுதந்திரத்தைப் பிரதிபலித்து பாதுகாக்கும் ஊடகத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்திருக்கிறது, அது குறித்து நான் பெருமைப்படுகிறேன். கருத்துக் சுதந்திரத்தைக் காக்க மறைமுகமாய் போராடும் ஊடகம் இது, தேவைப்பட்டால் இந்த ஊடகத்தைக் கொண்டு நேருக்கு நேர் மோதவும் முடியும்.

இதை எல்லாம் ஹார்வர்டில் பேசப் போகிறீர்களா, என்று என் நண்பர்கள் சிலர் திகைப்புடன் கேட்டார்கள், சிலரால் நம்ப முடியவில்லை. நான் உயர்நிலைப்பள்ளிக்கு மேல் படிக்காதவன் என்பதை இங்கு தன்னடக்கத்துடன் நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு காலத்தில் படிப்பை நிறுத்தியது பற்றி பெருமைப்பட்டுக் கொண்டே நான் கல்வி பெற்றவர்கள் வட்டத்தில் என் குறைகள் குறித்து யாரும் குற்றம் சொல்ல முடியாதபடி பழகிக் கொண்டிருந்தேன். இப்போது, காலப்போக்கில் நான் கல்வியின் மதிப்பையும் கல்வி நிறுவனங்களின் மதிப்பையும் அறிந்து கொண்டிருக்கிறேன்.

மீண்டும் திரைப்படக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற என் கனவை நான் சொல்வது ஒரு தன்னடக்கம் என்று குழப்பிக் கொள்கிறார்கள். அது இரக்கமின்றி எனக்குப் புகட்டப்பட்ட பாடம். ஐம்பத்து சொச்சம் ஆண்டுகள். இருபத்து ஐந்து ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்டதை நல்ல ஒரு திரைக் கல்லூரி ஐந்து, அல்லது ஏழு ஆண்டுகளில் கற்றுக் கொடுத்திருக்கும். இதில் ஒரே வித்தியாசம், நல்ல ஒரு ஆறுதல் என்னவென்றால், நான் என் கல்விக்கு செலவு செய்யாமல் பணம் சம்பாதித்தேன். அது நல்ல கொடுக்கல் வாங்கல்தான் என்று நினைக்கிறேன்.

நூற்று இருபது கோடி மக்கள் கொண்ட ஒரு உள்ளூர் சந்தையே போதும் என்று அதன் குறுகிய எல்லைகளுக்குள் மகிழ்ச்சியாய் சிறைப்பட்டிருக்கக் கூடாது, இந்தியா விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியா உலகளாவிய தரங்களை நிர்ணயிக்க வ்நேடும் என்று விரும்புகிறோம்.

மீண்டும் நான் உங்களையும் என்னையும் தொடர்ந்து விழித்திருக்கும்படி நினைவுபடுத்திக் கொள்கிறேன். தன்னைக் காட்டிலும் பரந்த சமூகத்தைப் பொருட்படுத்தாமல் எந்த ஒரு அரசு அமைபுப்ம் மதமும் வெளிப்படையாகவோ மறைமுகமாவோ உங்கள் மனதைக் குறுகிய ஒரு தன்னலம் மிகுந்த நோக்கத்தின் பொருட்டு கட்டாயப்படுத்தும்போது, நாம் அது குறித்து எச்சரிகையோடு இருந்தாக வேண்டும்.

இவ்வாறு கமல் உரையாற்றியுள்ளார்.

Comments are closed.