இந்தியில் ஹிட்டடித்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி போல தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சாத்தியமா என அப்போதிருந்தே ஒரு விவாதம் ஓடிக்கொண்டு தான் இருந்தது.. ‘கோன் பனேகா குரோர்பதி’யை ‘கோடீஸ்வரன்’ ஆக மாற்றியதுபோல இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் சிறப்பாக உருவாக்க முடியும் என்கிற முனைப்புடன் விஜய் டிவி களத்தில் இறங்கியது..
இந்தியில் இந்த நிகழ்ச்சியை அமிதாப், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்து தொகுத்து வழங்கியது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது.. அதுபோல இந்த நிகழ்ச்சியை தமிழில் கமல் வழங்கினால் நன்றாக இருக்கும் என அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தது விஜய் டிவி நிர்வாகம்.
இந்த நிகழ்ச்சி அறிமுக விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து பேசினார். “சினிமாவில் இதுவரை வில்லனாக, குள்ளனாக, நாயகனாக, போலீஸாக, அமெரிக்கனாக, இந்தியனாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் இந்தியனாக வாழ்ந்து வருகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழக குடும்பத்துக்குள்ளும் சென்றடைய ஒரு நல்ல வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அமிதாப் பச்சன் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் வித்தியாசமாக செய்திருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். அவர்களை 30 கேமராக்கள் பதிவு செய்யும். அவற்றை நான் அவ்வப்போது கண்காணிப்பேன். காமெராக்கள் இருப்பதால் யதார்த்தம் போய் விடும் என்பது தவறு. பிக் பாஸ் வீட்டுக்குள் போன கொஞ்ச நேரத்தில் கேமரா இருப்பதையே பிரபலங்கள் மறந்து விட்டு, இயல்பாகி விடுவார்கள். நிச்சயம் இது யதார்த்தமான ஒரு நிகழ்ச்சியாக அமையும் என நம்பிகிறேன். பல சமயங்களில் நாங்கள் கூட கேமரா இருப்பதை மறந்து ஏதோதோ பேசி சர்ச்சையில் சிக்கியதுண்டு” என்று தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.

Comments are closed.