நடிகர்கள் : பரத், அஜய் கார்த்தி, பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி, பிரகாஷ்ராஜ், கிஷோர், அனந்த் நாக்
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா
இயக்கம் : ஸ்ரீ செந்தில்
தயாரிப்பு : ஸ்கை பிக்சர்ஸ் – ஃபைவ் ஸ்டார் கே. செந்தில், டாக்டர். என். யோகேஸ்வரன்
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெற்றி பெற்ற ‘காளிதாஸ்’ படத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், மற்றொரு குற்ற சம்பவத்தை மையமாகொண்டு வெளியாகியிருக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரான ‘காளிதாஸ் 2’ முதல் பாகத்தைப் போல் ரசிகர்களை திரில்லரில் மூழ்கடிக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை தேடும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ ஈடுபடுகிறார்கள். அஜய் கார்த்தி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளும்போது, வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ், அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததை காரணம் காட்டி அவரை காப்பாற்றுகிறார்.
இதற்கிடையே காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைப்பதோடு, அடுத்த சில நாட்களில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மற்றொரு சிறுமியும் மர்மமான முறையில் இறக்கிறார். இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார் ? என்பதை காவல்துறை எப்படி கண்டுபிடிக்கிறது, என்பதை பரபரப்பாக சொல்வதே ‘காளிதாஸ் 2’.
காளிதாஸ் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், முதிர்ச்சியான நடிப்பின் மூலம் உண்மையான காவல்துறை அதிகாரியை பிரதிபலித்திருக்கிறார். போலீஸுக்கான துணிச்சலுடன் பயணித்தாலும், நிதானமான அனுகுமுறை மற்றும் கூர்மையான விசாரணை மூலம், நெருக்கடியான சூழ்நிலைகளை அனுபவம் வாய்ந்த காவல்துறை அதிகாரிகள் எப்படி சாமர்த்தியமாக கையாள்வார்கள், என்பதை தன் நடிப்பின் மூலம் பரத் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி, அதிகம் பேசவில்லை என்றாலும், படம் முழுவதுமே அவரைப் பற்றி தான் பேசுகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே அமைதியான முகத்தோடும், பல்வேறு விசயங்களை பேசும் கண்களோடும் அறிமுகமாகி கவனம் ஈர்க்கும் அஜய் கார்த்தி, திருப்பம் மிக்க கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ஸ்டீபன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ‘பூவே உனக்காக’ சங்கீதா, எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, களப்பணி பற்றி சரியாக தெரியாமல், பதவி அதிகாரத்தின் மூலம் அதிரடியாக செயல்பட்டு, பிறகு அவஸ்தைப்படும் ஆர்வகோளாறு அதிகாரிகளை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். அபர்ணதிக்கு சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையின் திருப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பார்வையாளர்களின் கவனம் வேறு எந்த பக்கமும் திரும்ப கூடாது என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, படம் முழுவதிலும் குறிப்பிட்ட ஒரு வண்ணத்தை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் சென்னையை பல்வேறு கோணங்களில் காட்டி, அனைத்து காட்சிகளையும் பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக பேச வைக்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. அதிகப்படியான சத்தம் இல்லாமல் படம் முழுவதுதிலும் ஒருவித அமைதியான சூழல் இருப்பதற்கு ஏற்ப பின்னணி இசையிலும் ஒருவித அமைதியை பின்பற்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.
ஒரு குற்ற சம்பவத்துடன் தொடங்கும் கதையின் பயணம் பல்வேறு சம்பவங்களின் கோர்வையாக விரிவது தான் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் பாணி, என்றாலும் இயக்குநரின் திருப்பங்களை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசனின் பணியும் பாராட்டுக்குறியது.
படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டினாலும், திரைக்கதையில் அவர்களுக்கான பங்களிப்பு அதிகம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கும் திரைக்கதை ஆசிரியர் அரவிந்தன் ஆனந்த், கதையில் இருக்கும் ஒரு சம்பவத்துடன், பல குற்ற சம்பவங்களை இணைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற விறுவிறுப்பு மற்றும் பரபரப்போடு படத்தை வேகமாக நகர்த்தி சென்றாலும், காவல்துறையின் அமைப்பு மற்றும் அதன் பணிச்சுமை ஆகியவற்றுடன் அதிகாரிகளின் இக்கட்டான சூழ்நிலையை உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார்.
காட்சிகளையும், வசனங்களையும் நீட்டிக்காமல் சுருக்கமாக சொல்லி, சீரான வேகத்தோடு கதையை பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீ செந்தில், படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்களை கதைக்குள் ஈர்ப்பவர், இறுதி வரை அடுத்தது என்ன ? என்ற கேள்வியுடன் ரசிகர்களை பதற்றத்துடன் படம் பார்க்க வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5
Comments are closed.