‘ஜாக்கி’ விமர்சனம்

47

நடிகர்கள் : யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி, மதுசூதன் ராவ், காளி, சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் கணேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா
இசை : சக்தி பாலாஜி
ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்
இயக்கம் : டாக்டர்.பிரகபல்
தயாரிப்பு : பிகே7 ஸ்டுடியோஸ் எல்.எல்.பி – பிரேமா கிருஷ்ணதாஸ், சி.தேவதாஸ், ஜெயா தேவதாஸ்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயகன் யுவன் கிருஷ்ணா ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டிருப்பதோடு, கிடா சண்டையில் அதிகம் ஆர்வம் கொண்டவராகவும் இருக்கிறார். அவரைப் போலவே கிடா சண்டையின் மீது ஆர்வம் மட்டும் இன்றி அதை கெளரவமாக கருதுகிறார் ரிதன் கிருஷ்ணா. இதற்கிடையே, யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாயை ஒரு சண்டையில் தோற்கடித்து விடுகிறது. இதனால் கோபம் கொள்ளும் ரிதன் கிருஷ்ணா, யுவன் கிருஷ்ணாவிடம் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

கிடா சண்டையால் ஆரம்பித்த மோதல் இரு தரப்புக்கும் இடையே வெட்டு குத்து வரை செல்ல, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யும் ஊர் பெரியவர்கள், எதனால் இவர்களுக்கு இடையே பகை உருவானதோ, அதன் மூலமாகவே தீர்க்க திட்டமிடுகிறார்கள். அதன் மூலம், இருவரது கிடாய்களுக்கு இடையே போட்டி வைக்கிறார்கள். அந்த போட்டி இவர்களின் பகைக்கு முற்றுப்புள்ளி வைத்ததா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடக்கும் கிடா சண்டை போட்டியை மையப்படுத்திய கதையை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் டாக்டர்.பிரகாபல, கிடா சண்டை போட்டிகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டியிருப்பதோடு, தான் வளர்க்கும் கிடா போல் சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் அடிதடி என்று பயணிப்பவர் மறுபக்கம் அம்மு அபிராமி உடனான காதல் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நடிகராக தேர்ச்சி பெற்று விடுகிறார்.

ஹீரோவுக்கான அத்தனை அம்சங்கள் இருந்தாலும், வில்லனாக மிரட்டியிருக்கும் ரிதன் கிருஷ்ணா, ”கிடா சண்டை மட்டும் அல்ல, ரவுடிசமும் பண்ண தெரியும்” என்று அதிரடி வசனங்கள் பேசி, தன் பங்கிற்கு திரையில் பெரும் அனலை கக்கியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.

மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் மதுரை மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளின் நிறத்தையும், அம்மக்களின் மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிடா சண்டை மற்றும் போட்டிகள் படமாக்கிய விதம் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கிடா சண்டை போட்டிகளை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

படத்தின் டிரைலரையே மிரட்டலாக தொகுத்த என்.பி.ஸ்ரீகாந்த், படத்தை மிரட்டலாக மட்டும் இன்றி உணர்வுப்பூர்வமாக தொகுத்து திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் டாக்டர்.பிரகாபல், உண்மை சம்பவங்களை படமாக்கும் போது, அதை திரை மொழியில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை மிக சரியாக செய்திருக்கிறார். குறிப்பாக கிடா சண்டை மற்றும் போட்டிகளை மிக தத்ரூபமாக படமாக்கி சினிமா பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.

கிடா சண்டை அதன் மூலம் உருவாகும் பகை, என்ற கதைக்கருவுக்கு அமைத்திருக்கும் திரைக்கதையில் காதல், செண்டிமெண்ட் என்று பல அம்சங்களோடு, மதுரை மாவட்ட வாழ்வியலை சொல்லும் ஒரு படைப்பாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் இந்த ‘ஜாக்கி’ சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.

ரேட்டிங் 3.3/5

Comments are closed.