ஜன-25ல் ஜேசுதாஸுக்கு பிரமாண்டமான பாராட்டுவிழா..!

186

 

திரை இசை உலகில் ஐம்பதாண்டு காலமாக தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி அதில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்.. திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம் வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண் உட்பட பல பட்டங்களுக்கு தனது இசையால் கெளரவம் சேர்த்த  டாக்டர். கே.ஜே.யேசுதாஸ், சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும் வென்றவர்.  பாடல்களை பாட இவர் போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுவிட்டது.

இந்த இசைமேதை தனது இசைப்பயணத்தை இனிதே தொடர்ந்து கொண்டிருப்பதை கவுரவிக்கும் வகையிலும், ஒரு இசைத்திருவிழாவாகவே போற்றிக் கொண்டாடவும் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஜனவரி 25ம் தேதி,சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள்,  பாடகர்கள்,  இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்,  தொழில்நுட்ப கலைஞர்கள் மேலும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவரும்  திரண்டு வந்து தங்களின் அபிமான பாடகரைப் போற்றி கவுரவிக்க உள்ளனர்.

Comments are closed.