
காதலியிடம் காதலை சொல்ல தயங்குகிறீர்களா.. இதோ நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என நண்பர்களுடன் சேர்ந்து காதல் சர்வீஸ் நடத்துகிறார் விக்ரம் பிரபு. காதலனுக்கு பில்டப் கொடுக்கும் விதமாக சில ட்ராமாக்களை அரங்கேற்றி, காதலியே வந்து காதலை சொல்லும் விதமாக செய்வதுதான் இவர்கள் பணி.. அதற்கு சர்வீஸ் சார்ஜ் தனி.
தான் விரும்புகின்ற, ஆனால் தன்னை இதுவரை அறிந்திராத கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை சொல்வதற்கு தயங்கும் கோடீஸ்வரர் நவ்தீப், இவர்களை தேடிவருகிறார். வழக்கம்போல ட்ராமாவுக்கு தயாராகி நிற்கும்போதுதான், நவ்தீப் விரும்புவது சில வருடங்களுக்கு முன் தான் காதலித்து பிரிந்த தனது காதலி கீர்த்தி என்பது விக்ரம் பிரபுவுக்கு தெரிய வருகிறது.
வருடங்கள் சில ஆனாலும் தன் மனதில் இன்னும் கீர்த்தி அப்படியேதான் இருக்கிறார் என்பதை உணரும் விக்ரம் பிரபு, தனது காதலியை வேறொருவருக்கு தாரைவார்க்க விரும்பாமல், தனது தொழில் தர்மத்தை மீறி, நவ்தீப்புக்காக போடும் ட்ராமாக்களை வேண்டுமென்றே சொதப்புகிறார்.
நவ்தீப்பும் சரி, நண்பர்களும் சரி எதனால் இப்படி ஆகிறது என குழம்பி நிற்க, இறுதியில் விக்ரம் பிரபு தான் இதற்கு காரணம் என கண்டுபிடிக்கின்றனர். அதன்பின் அவர்கள் எடுக்கும் முடிவு என்ன..? விக்ரம் பிரபு கீர்த்தியுடன் இணைந்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
கீர்த்தியை பிரிவதற்கு, அவர் தன்னிடம் நாடகமாடியதுதான் காரணம் என காரணம் சொன்ன விக்ரம் பிரபு, பிற்பாடு அந்த வேலையை, அதாவாது நாடகமாடி காதலை சேர்த்து வைப்பதையே தொழிலாக மேற்கொள்வது சுவராஸ்யமான நகைமுரண்.. கல்லூரியில் கிரிக்கெட் வீரரான விக்ரம் பிரபு, ஹாக்கி விளையாட்டில் அடாவடியான எதிரணியை சமாளிக்க கிரிக்கெட் பேட்டிங் உத்தியை பயன்படுத்தி கோல அடிப்பது சூப்பர் ஐடியா.
கதாநாயகி கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் இது முதல் படம்.. பாந்தமான அழகு, அலட்டல் இல்லாத நடிப்பு, சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் என சிம்பிளாக பாஸ் ஆகிவிடுகிறார்.. ரொம்ப நாள் கழித்து தலைகாட்டியிருக்கும் நவ்தீப்பிற்கும் சோடை போகாத வேடம் தான்.
விக்ரம்பிரபுவின் டீமில் இருக்கும் பாலாஜி & பாலாஜி உட்பட அனைவரும் செட்டப் ட்ராமா காட்சிகளில் அசத்துகிறார்கள். லுத்புதீன் நாசர் காதலுக்காக கெட்டப் சேஞ்ச் ஆவது, சார்லியின் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் பர்பாமான்ஸ், நாசர், அம்பிகா என அவர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் ‘இருக்கிறாய்’ பாடல் இனிமை. கேரள கல்லூரி காட்சிகளிலும் விக்ரம் டீமின் ட்ராமா ஏரியா காட்சிகளிலும் சுவராஸ்யம் கூட்டுகிறது நீரவ்ஷாவின் கேமரா. காதலை சேர்த்துவைக்க ட்ராமா ஆட்டும் பகுதி சுவாரஸ்யம் என்றாலும், அதுவே முழு நேரம் என்பதால் கொஞ்சம் அயர்ச்சி ஏற்படவே செய்கிறது.
தராம செட்டப்புக்காக விக்ரம் பிரபு நகரத்தில் நினைத்த இடங்களில் எல்லாம் க்ளோஸ் சர்க்யூட் கேமராவை பொருத்துகிறார் என்பதெல்லாம் டூமச். அதிலும் அந்த செயற்கை மழையெல்லாம்… விஜய் நீங்களுமா என கேட்க வைக்கிறது,. தவிர பிரிந்த காதலர்களான விக்ரம் பிரபு-கீர்த்தி இருவரும் மீண்டும் சேர்வதற்கான காட்சியமைப்பு திரைக்கதையில் இல்லாதது பலவீனம். இதற்கு முன்பு வெளியான சில படங்களின் சாயல் இதில் தெரிவதை இயக்குனர் விஜய் தவிர்த்திருக்கலாம்.
இது என்ன மாயம் – பார்க்க..! ரசிக்க..!
Comments are closed.