
‘ரட்சகன்’, ‘ஜோடி’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீண் காந்தி தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘புலிப்பார்வை’. இந்தப்படத்தை வேந்தர் மூவிஸ் தயாரித்திருக்கிறது. இந்தப்படம் விடுதலைப்புலிகளை தவறாக சித்தரித்திருபதாகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரிடையே எதிர்ப்புகளை கிளப்பி வந்தது.
இன்னொரு பக்கம் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சிறுவன் பாலச்சந்திரனை போராளியாக காட்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் படத்தின் இயக்குனரோ இதில் துளியும் உணமையில்லை என மறுத்துவந்தார்.
இந்நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குனர் சீமான், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். சீமான் இந்தப்படத்தை தான் பார்த்துவிட்டதாகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தப்படம் இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து மத்திய அமைச்சரும் அதை வலியுறுத்தி பேசினார்.
இறுதியாக பாரிவேந்தர் பேசவந்தபோது திடீரென அரங்கில் ஆங்காங்கே உட்கார்ந்திருந்த 25க்கும் அதிகமான மாணவர்கள் எழுந்து படத்தை தடை செய்யவேண்டும் என கோஷம் போட்டனர்.. அவர்களை பொறுமையாக இருக்குமாறு பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்காமல் மேடையை நோக்கி கோஷம் போட்டுக்கொண்டே முன்னேறியதால் பாதுகாப்பிற்காக அங்கே நின்றிருந்த போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள். மத்திய அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.