‘இம்மார்டல்’ (Immortal) விமர்சனம்

17

நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர்
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : அருண் ராதாகிருஷ்ணன்
இயக்கம் : மாரியப்பன் சின்னா
தயாரிப்பு : ஏகே பிலிம் பேக்டரி – அருண்குமார் தனசேகரன்

வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, தனியாக வசிக்கும் கயாடு லோஹர் வீட்டில் குறைந்த வாடகை அறை கிடைக்கிறது. வசதியான வீடு, அழகான வீட்டு உரிமையாளர் என்பதால் எதையும் பற்றி யோசிக்காமல் அந்த வீட்டில் குடியேறும் ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹரின் கவர்ச்சியில் மயங்கி விடுகிறார். அவரது மயக்கத்தை போக்கும் விதத்தில் கயாடு லோஹரும் அவருடன் இணைய முயற்சிக்கும் போது, திடீரென்று அந்த வீட்டில் ஒருவர் நடமாடுகிறார். கயாடு லோஹர் அவரை தனது தாத்தா என்று கூறுகிறார்.

யாரும் இல்லாத வீட்டில் திடீரென்று தாத்தா எப்படி வந்தார் ? என்று யோசிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, அந்த தாத்தா மூலமாக அந்த வீடு பற்றிய பல மர்மங்கள் தெரிய வருகிறது. முதலில் அதை நம்பாத அவர் வழக்கம் போல் கயாடு லோஹருடன் கடலை போடுவதில் தீவிரம் காட்ட ஒரு கட்டத்தில், தன்னை சுற்றி நடக்கும் மர்மமான விசயங்கள் பற்றி யோசிக்கிறார். அப்போது தான் அவர் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பதை புரிந்துக் கொள்பவர், அந்த வீடு பற்றிய முழுமையான மர்மங்களை அறிந்துக் கொள்வதோடு, தன்னை சுற்றி இருக்கும் ஆபத்திடம் இருந்து எப்படி தப்பிக்கிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழக்கமான கதாபாத்திரம் தான் என்றாலும், இரண்டாம் பாதியில் நடிக்க கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அந்த வீட்டில் இருக்கும் ஆபத்தை அறிந்து அச்சமடைவது, அங்கிருந்து தப்பிக்க முயற்சிப்பது, பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பயணிப்பது என்று நடிப்பில் வேறுபாட்டை காண்பித்திருக்கிறார்.

அழகான ராட்சசி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவராக இருக்கும் கயாடு லோஹரின் அழகு மற்றும் கவர்ச்சி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. முதல் பாதியில் தன் கவர்ச்சியால் கிரங்கடிக்கும் கயாடு லோஹர், இரண்டாம் பாதியில் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்த டி.எம்.கார்த்திக், வித்தியாசமான கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும்படி நடித்திருக்கிறார். லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹாராஜ், பேமா சாம்சோ, சுனிதா ஷ்ரேஷ்டா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், தனது மொத்த வித்தையையும் இறக்கி நாயகி கயாடு லோஹரை அழகாக காட்டியிருக்கிறார். அவரது அழகும், கவர்ச்சியும் திரைக்கதைக்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் கிராபிக்ஸ் காட்சிகளையும் சரியான முறையில் கையாண்டிருக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலாவது தன் திறமையை வெளிப்படுத்துவார், என்று எதிர்பார்த்தால் அங்கேயேயும் பெருத்த ஏமாற்றமே. எதாவது விசித்திரமான மிருகம் அல்லது உருவத்திற்கான பின்னணி இசை என்றாலே ஆங்கிலப் படங்களின் வாடை அதிகம் இருக்கும். சாம்.சி.எஸும் அதே பாணியை பின்பற்றி படத்தில் வரும் விசித்திரமான உயிரினத்திற்கான பீஜியம் அமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ராஜேஷ்.எம், காட்சிகளை சுருக்கமாக வெட்டி படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லரோடு ஃபேண்டஸியையும் இணைத்து திரையில் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் மாரியப்பன் சின்னா. அழகுக்கு பின்னாள் மிகப்பெரிய ஆபத்து இருக்கப் போகிறது, என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தாலும், அது என்னவாக இருக்கும் ? என்ற கேள்வி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பிறந்த அழிவு இல்லாத ஒரு உயிரினம், அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட திரைக்கதையும், அதற்கான காட்சியமைப்புகளும் பாராட்டும்படி இருக்கிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் இத்தகைய சோதனை முயற்சிகள் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருப்பதோடு, அதை புரியும்படி சொல்வது மிக சவாலானதாக இருக்கும். ஆனால், அந்த சவாலை மிக சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் இயக்குநர் மாரியப்பன் சின்ன, இந்த ‘இம்மார்டல்’ மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்து, நடுங்க வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.