“நான் ஒரு எல்லைச்சாமியாக இருந்துவிட்டு போகிறேன்”- அமீரா விழாவில் நெகிழ வைத்த சீமான்

251

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த டூலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் பூஜை இன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனரும் நடிகருமான செந்தமிழன் சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “ஒரு நேர்த்தியான படத்தில் நானும் இருக்கிறேன் என நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.. அதிலும் அண்ணன் சீமானுடன் இணைந்து நடிக்கிறாம் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த படத்தில் உண்மையிலேயே கதாநாயகன் என்றால் அது நாயகி அனு சித்தாரா தான்” என்றார்.

செந்தமிழன் சீமான் பேசும்போது, “இது தமிழ் தலைப்பு அல்ல தான்.. ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைப் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை பற்றிய கதை அதனால் அமீரா என பெயர் வைத்துள்ளோம் அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். அமீரா தான் மையக்கரு.. நாங்கள் இருவரும் அவரை நோக்கி செல்லும் கதாபாத்திரங்கள்தான்.. அதேசமயம் கதையின் ஒவ்வொரு அடுக்கிலும் விறுவிறுப்பும் வேகமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கவே செய்யும்..

அரசியலை கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களை செலவிடுகிறீர்களே என்கிறார்கள் எனக்கு இருபது நாள் தான் படப்பிடிப்பு இருக்கிறது.. மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.. அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்கு செலவிடுகிறேன்.. அவ்வளவுதான்.

சமூக அவலங்கள், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்படுகிறது இஸ்லாம் தீவிரவாதம் என்பது ஒரு கட்டுக்கதை. இந்து, கிறிஸ்து, பௌத்தம் என எல்லா மதங்களிலும் தீவிரவாதம் உண்டு.. அதேசமயம் எல்லா மதங்களும் நன்னெறியை தான் போதிக்கின்றன.. இது ஒரு சமூக அக்கறை உள்ள படம்தான்.. இன்றைய சூழலில் குடும்ப உறவுகளை சொல்வதே ஒரு சமூக அக்கறை என்று ஆகிவிட்டது.

திரையில் தோன்றுவது எவ்வளவு அவசியம் என்று இயக்குனர்கள் மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோர் எனக்கு போதித்துள்ளார்கள்.. படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத்தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.. அதற்காக எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்துவிட முடியாது..

எனக்கேற்ற கதாபாத்திரங்கள், அதன்மூலம் நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் சரியாக அமைந்தால் நடிப்பதில் தவறில்லை. திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாக பார்க்கிறோம்.. அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல.. திரைக்கலை என்பது ஒரு தீக்குச்சி போல.. இதை நீங்கள் என்னவாக பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம். பொழுதுபோக்கு படங்களில் நடிப்பதற்கு என்னை அழைக்கவும் மாட்டார்கள் நான் அதற்கு தேவைப்படும் மாட்டேன்” என்றார்.

Comments are closed.