ரசிகர் நற்பணி மன்றம் தொடங்கினார் ஜி.வி. பிரகாஷ்

241

இசையமைப்பாளராக இருக்கும் வரை சாதாரணமாக இருந்த கலை உலக பயணம் நடிகராக அவதாரம் பூசியதுமே தவிர்க்க முடியாதபடி திசை திரும்பி விடுகிறது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். ஆம்.. அவரும் நேற்றுமுதல் தனது பெயரில் ரசிகர் நற்பணி மன்றங்களை தொடங்கிவிட்டார்.

நேற்று ஜி.வி.பிரகாஷின் பிறந்தநாள் விழா, அவருடைய சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

பிறந்தநாளை முன்னிட்டு முதல் நற்பணியாக சென்னை திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்கள் சிறுவர்கள் காப்பகத்திற்கும், சென்னை ஓட்டேரியில் உள்ள ஆஷா நிவாஸ் பாய்ஸ் ஷெல்டர் ஹோமிற்கும் இரவு உணவு சென்னை மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. சரி.. இன்னும் படம் எதுவும் வெளிவராத நிலையில் திடீரென ரசிகர் இவர் மன்றம் ஆரம்பிக்க வேண்டிய காரணம் என்ன..?

“என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என பரவி கிடக்கிறார்கள். ரசிகர் மன்றம்னு சொன்னாலே இங்க தப்பா பார்க்கப்படுது. நிச்சயமா நம்மை நேசிக்கின்ற இளைஞர்களை வைத்து இங்கு ஆக்கப் பூர்வமான செயல்களை செய்ய முடியும். அதற்காக அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றவே இந்த நற்பணி மன்றத்தை துவக்கினேன். எனக்கான பேர், புகழ் எல்லாவற்றையும் கொடுத்த இந்த தமிழ் சமூகத்துக்கு நான் என்னால் முடிந்ததை திருப்பி கொடுக்கணும்னு நினைக்கிறேன்” என்று காரணம் கூறுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

நற்பணி மன்றங்களை நடத்துவதில் கமல் மற்றும் சூர்யாவின் பாதையில் தான் பயணிக்க விரும்புகிறாராம் ஜி.வி.பிரகாஷ். ரசிகர்கள் எவரேனும் புதிய மன்றம் தொடங்க விரும்பினால் 9003687202 என்ற எண்ணிலோ gvpfansclub@gmail.com என்ற மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

Comments are closed.