’ஃபைண்டர்’ விமர்சனம்

333

நடிகர்கள் : வினோத் ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சார்லி, செண்ட்ராயன், தாரணி
இசை : சூர்ய பிரசாத்
ஒளிப்பதிவு : பிரசாந்த் வெள்ளிங்கிரி
இயக்கம் : வினோத் ராஜேந்திரன்
தயாரிப்பு : அரபி புரொடக்‌ஷன்ஸ் & வியன் வெஞ்சர்ஸ் – ரஜீஃப் சுப்பிரமணியம் & வினோத் ராஜேந்திரன்

அறிமுக இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஃபைண்டர்’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படமான இப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

குற்றவியல் பட்டம் பெறும் நாயகன் வினோத் ராஜேந்திரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை தொடங்குகிறார். அந்நிறுவனம் மூலம், குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரிடம், கொலை வழக்கு ஒன்றில் கொற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் வழக்கு வருகிறது. குற்றமற்ற சார்லியை காப்பாற்ற களத்தில் இறங்கும் நாயகனின் பரபரப்பான துப்பறியும் பயணம் தான் ‘ஃபைண்டர்’.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, படத்தின் அடையாளமாக இருப்பதோடு, தனது நடிப்பின் மூலம் பலமாகவும் பயணித்திருக்கிறார். குடும்ப கஷ்ட்டத்திற்காக செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து கலங்கும் இடங்கள் அட்ரா சக்க ரகம். ஆனால், சோகமான காட்சிகள் என்றாலே அழுவதையே நடிப்பாக வெளிப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

செண்ட்ராயனுக்கு முக்கியமான வேடம் என்றாலும், அவருக்கான வாய்ப்பு என்னவோ குறைவு தான். ஆனால், அதில் நிறைவாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தாரணி நாயகனுடன் பயணித்தாலும், திரக்கதையோடு பயணிக்காமல் தனித்து நிற்கிறார்.

நிழல்கள் ரவி சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறார்

வழக்கறிஞர் சரண்ராஜ், பீமா, குரு, காவல்துறை அதிகாரி, ருத்ரசுவாமி, வேளச்சேரி கவுன்சிலர், கவுன்சிலரின் மனைவி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், அவர்களின் நடிப்பில் அது தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் பிராசந்த் வெள்ளிங்கிரியின் கேமரா திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. சூர்ய பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கவனம் ஈர்க்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் வினோத் ராஜேந்திரன் தான் கதை எழுதி இயக்கியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே குற்றவியல் துறை மாணவர்கள் அத்துறைப்பற்றி கூறும் தகவல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர், கொலை வழக்கின் மர்மங்களை தேடி செல்லும் நாயகனின் துப்பறியும் பயணத்தை பரபரப்பாக மட்டும் இன்றி திரில்லிங்காகவும் நகர்த்தி சென்று ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.

இப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் வினோத் ராஜேந்திரன் ஒரு புதுமுகம் போல் இல்லாமல் தேர்ந்த நடிப்பை தந்திருக்கிறார். மேலும் ரசிகர்கள் ரசித்து மகிழும் விதத்தில் ஒரு அருமையான படத்தை தந்த விதத்தில் முதல் படத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.

3.5/5

Comments are closed.