எண்பதுகளில் இருந்த கட் அவுட் கலாச்சாரத்தையும், ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையே நிலவி வந்த மோதலையும், இதற்குள் நுழைய பார்க்கும் அரசியலையும் வைத்து வெளியாகியுள்ள படம் தான் ‘எங்கிட்ட மோதாதே’..
ரஜினி ரசிகரான நட்டியும் கமல் ரசிகரான ராஜாஜியும் கட் அவுட் படம் வரைபவர்கள்.. தங்கள் முதலாளியிடம் இருந்து பிரிந்து நட்டியின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து தனியாக ஆளுக்கொரு ஆர்ட்ஸ் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள்.. பிசினஸ் சூடுபிடித்ததும் ராஜாஜி தனது தங்கை சஞ்சிதா ஷெட்டி மற்றும் அம்மாவை அழைத்து வந்து தனி வீடு பார்த்து தங்கவைக்கிறார்.. இன்னொரு பக்கம் ஊருக்குள் மாவரைத்து தரும் பார்வதி நாயரையும் டாவடிக்கிறார்.. சஞ்சிதாவுக்கும் நட்டிக்கும் என இன்னொரு காதல் ரூட்டும் ஒருபக்கம் ஓடுகிறது.
கட் அவுட் வரைவதுடன் ரஜினி-கமல் படம் வெளியாகும்போது ஆளுக்கு ஆள் தங்களது ரசிகர் மன்றத்தின் கெத்தை காட்டுகிறார்கள்.. ஊருக்குள் அடுத்த எம்.எல்.ஏ ஆவதற்காக காத்திருக்கும் ராதாரவிக்கும் சொந்தமாக தியேட்டர் இருக்கிறது., அதில் கட் அவுட் வைக்கும் பிரச்சனையில் அவரது வலதுகையாக கேண்டீன் காண்ட்ராக்ட் நடத்தும் அடாவடி விஜய்முருகனை ஒரு தருணத்தில் நட்டி அடித்துவிடுகிறார்.
இதனால் அவரை பழிதீர்க்க தருணம் பார்த்து கறுவிக்கொண்டு இருக்கிறார் விஜய் முருகன்.. இந்நிலையில் சஞ்சிதா–நட்டி காதல் விவகாரம் ராஜாஜிக்கு தெரியவர, அன்றுமுதல் நட்பில் விரிசல் விழுந்து இருவரும் எதிரிகளாகின்றனர்.. இவர்கள் இருவரையும் பகடைக்காய்களாக்கி ஒருவரை அழித்துவிட திட்டம் தீட்டுகின்றனர் ராதாரவியும் விஜய்முருகனும்.. மீண்டும் நண்பர்கள் இணைந்தார்களா..? இல்லை உள்ளே நுழைந்த அரசியல் இவர்களை காவு வாங்கியதா என்பதெல்லாம் மீதிக்கதை.
ரஜினி-கமல் ரசிகர்களாக நட்டியும் ராஜாஜியும் ஏக பொருத்தமான தேர்வு… நட்டி, தான் அறிமுகமான படத்தில் இருந்தே தனது நடை உடை பாவனைகளில் ரஜினியை பிரதிபலித்து வந்துகொண்டிருப்பதால் அவரை சுலபமாக ரஜினி ரசிகனாக ஏற்றுக்கொள்ள நம்மால் முடிகிறது.. ரசிகர் மன்ற, கட் அவுட் விவகாரங்களில் விட்டுக்கொடுக்காமல் சீறுவது, அடாவடி பண்ணும் விஜய் முருகனை காட்டு காட்டென காட்டுவது.. ராதாரவியையே தங்களது ரசிகர் மன்ற எண்ணிக்கை கணக்கு சொல்லி மிரள வைப்பது என படம் முழுக்க நட்டியின் ராஜ்ஜியம் தான்.
அதேபோல ராஜாஜியும் கமல் ரசிகனுக்குன்டான இலக்கணத்துடனேயே படம் முழுக்க வளைய வருகிறார். அரசியல்வாதியாக ராதாரவியின் நடிப்பு எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத ஒன்று.. வில்லத்தனத்துக்கு சரியான தோற்றத்துடன் கூடிய ஆளாக (ஆர்ட் டைரக்டர்) விஜயமுருகன் அம்சமான தேர்வு.. கதாநாயகிகள் சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் இருவரும் இயற்கையான அழகுடன் நாயகர்களை காதலிக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.. திலும் சஞ்சிதா ஷெட்டி கூடுதலாகவும் ஒரு வேலை பார்த்திருக்கிறார். சுமார் மூஞ்சி குமார் முருகானந்தம் மற்றும் வெற்றிவேல் ராஜா இருவரின் காமெடியும் ஊசிப்பட்டாசு ரகங்கள்.
எம்.சி.கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு கதை நிகழும் காலகட்டத்துக்கே நம்மை அழைத்து செல்கிறது.. நடராசன் சங்கரன் இசையில் காலகட்டத்தை மீறிய நவீன இசை தென்படுவதை தவிர்த்திருக்கலாம். கோல்டு ஸ்பாட், நேசமணி போக்குவரத்து கழகம் என பல விஷயங்களில் பார்த்து பார்த்து செய்து எண்பதுகளை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ஆறுச்சாமி.
ரஜினி-கமல் ரசிகர்கள், கட் வுட் கலாச்சாரம் என சுவையான் ஏரியாவில் கதை பின்னியிருக்கும் இயக்குனர் ராமு செல்லப்பா, அதற்குள் அழகாக அரசியலை நுழைத்து காமெடியில் இருந்து ஆக்சன் மூடுக்கு நம்மை மாட்டை மாற்றும் வேலையை சரியாக செய்திருக்கிறார்.. தங்கையை காதலிப்பதால் நண்பர்கள் பிரிவது, வலதுகையாக இருப்பவன் தலைவருக்கு எதிராக மாறுவது என வழக்கமான க்ளிஷேக்களும் உண்டு என்றாலும் இவை ஆரம்பித்ததே அந்த எண்பதுகளின் காலகட்டத்தில் தான் என்பதால் அது ஒன்றும் பெரிய குறையாக தென்படவில்லை..
அன்றைய ரஜினி-கமல் ரசிகர்களுக்கு தங்களது கடந்தகால ஞாபகங்களை தூண்டுவதாகவும், இன்றைய பிளக்ஸ் ட்ரென்ட் இளசுகளுக்கு ரஜினி-கமல் ரசிகர்களின் மவுசையும் வெளிச்சம் போட்டு காட்டும் விதமான ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இந்த ‘எங்கிட்ட மோதாதே’ படம் இருப்பதால் தாராளமாக தியேட்டர்களுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

Comments are closed.