ஒருகாலத்தில் புகழ்பெற்ற வசனங்களாக இருந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது படங்களுக்கு டைட்ட்டிலாக மாறி வருகினறன. அப்படி ஒரு வார்த்தைதான் மௌனராகம் படத்தில் கார்த்திக் பேசிய புகஸ்ப்பெற்ற வசனமான இல்லையில்லை வார்த்தையான ‘மிஸ்டர் சந்திரமௌலி ‘. இப்போது தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படத்திற்கே ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
இதில் தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் திரு பேசும்போது, “கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை. ம். விண்டேஜ் கார்த்திக் சாரை இந்த படத்தில் பார்ப்பீர்கள். கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடித்திருக்கிறார். மகேந்திரன் சார் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்” என்று கூறினார்.
கௌதம் கார்த்திக் பேசும்போது, “நான் ஊட்டியில் படிக்கும் போது, என் அப்பாவோடு நிறைய பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடல் படத்துக்கு பிறகு சென்னை வந்த பின்பு தான் அவரோடு பக்கத்தில் இருந்து பழக ஆரம்பித்தேன். ஆனால் இந்த படத்தில் தான் படப்பிடிப்பில் அவரை நேரில் பார்த்தேன். அவரின் உழைப்பை பார்த்து வியந்தேன். இயக்குனர் திருவுக்கு யாரிடம் எப்படி வேலை வாங்கணும்னு தெரியும், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்” என நெகிழ்ந்தார்
“அப்பாவியான, கியூட்டான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் திரு. கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவருடனும் இணைந்து நடிப்பதற்காகவே படத்தை ஒப்புக் கொண்டேன். ரெஜினாவும், நானும் ஒரே படத்தில் நடித்தாலும் சண்டை போட்டுக் கொள்ளாத நாயகிகள்” என்றார் நாயகி வரலக்ஷ்மி.
கார்த்திக் சாரின் நண்பராக நடிக்க என்னை அழைத்தார்கள். அவரை பற்றி முழுமையாக தெரிந்தவன் என்பதால் அவருடன் இணைந்து நடிக்க முடிந்தது. படத்தின் இரண்டாவது பாதியில் நடக்கும் எதையுமே யூகிக்க முடியாத அளவுக்கு. திரைக்கதை அமைத்திருக்கிறார் திரு, பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார் இயக்குனர் அகத்தியன்.
“இதற்கு முன் கௌதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். எதோதோ பாடல் ரெஜினாவுக்கு நிச்சயம் ரெஜினா ஆர்மி ஆரம்பிக்க வைக்கும். ஆடையில் மட்டும் தான் லோ பட்ஜெட், மற்றபடி பிரமாண்டமான படம் தான் இது. கார்த்திக் சார் வந்தவுடனே எல்லோருக்கும் முத்தம் கொடுப்பார், அதுக்காகவே லைன் கட்டி நிற்போம். சிரிக்கவும், அழவும் வைக்கும் படமாக வந்திருக்கிறது என கலாய்த்தார் சதீஷ்.

Comments are closed.