
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நீண்ட நாள் கனவு ‘குற்றப்பரம்பரை’ கதையை, இல்லையில்லை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உசிலம்பட்டி அருகே உண்மையில் நடைபெற்ற சரித்திர நிகழ்வை படமாக்கவேண்டும் என்பது. ஆனால் இத்தனை வருடங்களாக அதற்கு அவர் முயற்சி எடுக்கும்போதெல்லாம் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு அது நிறைவேறாத கனவாகவே இருந்தது..
ஆனால் அந்த கனவும் நனவாகும் காலம் பிறந்துவிட்டது. இதோ இன்று காலை இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகின் முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது, ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் போராட்டத்தை, பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை பாரதிராஜா வரலாற்று காவியமாக வடிக்க உள்ளார்.
அதுமட்டுமல்ல, முக்கியமான கேரக்டர் ஒன்றிலும் பாரதிராஜா நடிக்க இருக்கிறார் என்பதை போஸ்டரே சொல்கிறது. மேலும் இந்தப்படத்தில் பங்குபெறும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.