தனஞ்செயன் உருவாக்கியுள்ள ‘கலைப்பொக்கிஷம்’..!

158

இன்று தமிழ்சினிமாவில் தவிர்க்கவேமுடியாத, ஒரு முக்கியமான இடத்தில் இருப்பவர் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியான தனஞ்செயன். அனைவரிடமும் புன்னகை முகத்துடன் பழகக்கூடிய தனஞ்செயன், யுடிவி நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப்படங்களின் முக்கிய முடிவுகள் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.

குறிப்பாக தமிழ்சினிமாவின் முன்னனி இயக்குனர்களையும் நடிகர்களையும் இணைத்து படம் தயாரிக்கும் ஆற்றல் கொண்ட மிகச்சிலரில் இவரும் ஒருவர். சினிமா ரசிகர்கள் பலருக்கு இவரை ஒரு தயாரிப்பளராக மட்டும் தான் தெரியும். ஆனால் தனஞ்செயன் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது சில வருடங்களுக்கு முன்பு ‘THE BEST OF TAMIL CINEMA’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி இவர் வெளியிட்டபோதுதான் தெரியவந்தது.

திரையுலகினர் முதற்கொண்டு சினிமா ரசிகர்கள் வரை அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய அந்த புத்தகத்தில் 1931ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படைப்புகள் குறித்தும், திரையுலக கலைஞர்கள் குறித்தும் எழுதியிருந்தார் தனஞ்செயன். இந்த புத்தகத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து ஒரு சிறப்பு விருது கூட பெற்றிருக்கிறார் தனஞ்செயன்.

அதே தனஞ்செயன் தான், தற்போது ‘PRIDE OF TAMIL CINEMA’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்தப்புத்தகத்தில் 1931-ஆம் ஆண்டிலிருந்து துவங்கி 2013ஆம் ஆண்டு வரையிலான தமிழ் சினிமா குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளதாம். அதுமட்டுமல்ல.. உலக சினிமா பிரபலங்களும் நம் தமிழ் சினிமா குறித்த தகவல்களையும் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கில மொழியில், சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது

இந்த புத்தகம் வரும் நவ-21-ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெறவிருக்கிற உலக திரைப்பட விழாவில், வெளியிடப்படவிருக்கிறது. சினிமா சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா குறித்து அறிய விரும்புகின்ற, தமிழ் சினிமா குறித்த ஆராய்ச்சிகள் நடத்துகின்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் இப்புத்தகம் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..

இந்த புத்தகம் 612 பக்கங்களை கொண்டது. தமிழ் சினிமா குறித்து அறியக் கூடிய பல தகவல்கள் அடங்கிய இந்த வண்ண புத்தகத்தில் ஏராளமான அரிய புகைப்படங்களும், தகவல்களும் அடங்கியுள்ளன இந்தப்புத்தகத்தின் விலை 1500 ரூபாய்.. விலை அதிகமாக இருப்பதுபோல தோன்றினாலும் இது ஒரு கலைப்பொக்கிஷம் என்கிற வகையில் விலைமதிப்பு இல்லாதது என்றே சொல்லவேண்டும்.

Comments are closed.