‘டியர் ரதி’ விமர்சனம்

320

நடிகர்கள் : சரவண விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியம்
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு : லோகேஷ் இளங்கோவன்
இயக்கம் : பிரவீன் கே.மணி
தயாரிப்பு : Insomniacs Dream Creations LLP & Logline Pictures – மோகன மஞ்சுலா.எஸ்

நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் ஒருவித பயம். அதனால் அவருக்கு கைகூடிய இரண்டு காதல் கைவிட்டு போய் விடுகிறது. பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவரது நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வருகிறது. அதனால், அவருடன் பழக ஆசைப்படுபவர், அவருடன் ஒருநாள் முழுவதும் செலவிட விரும்புகிறார். அதற்கு ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். மறுபக்கம் ஹஸ்லி அமானை பெரும் கூட்டம் ஒன்று தேடி வருகிறது.

நாயகன் உடனான ஒருநாள் பயணத்தையும், பெரும் கூட்டத்தின் தேடுதல் பயணத்தையும் எதிர்கொள்ளும் நாயகி ஹஸ்லி அமான் யார் ?, இவற்றை அவர் எப்படி எதிர்கொள்கிறார், என்பதை பலவித குழப்பங்களோடு சொல்வதே ‘டியர் ரதி’.

நாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம், தொலைக்காட்சி தொடரில் நடித்த அனுபவம் பெற்றிருப்பதால், படம் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதை சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார். வசன உச்சரிப்பில் எந்தவித தடுமாற்றமும் இன்றி நடித்திருப்பவர், அவ்வபோது பார்வையாளர்களை பார்த்தும் பேசுவதால், ”கொஞ்சமாவது நடிங்க சார்…”, என்ற பார்வையாளர்களின் குரலும் திரையரங்கில் கேட்க செய்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு படத்தில் மிக மிக குறைவு என்பதால் சரவண விக்ரமின் நிலை பரிதாபமே.

ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான், பேரழகியாக தெரியவில்லை என்றாலும், எளிமையான அழகு மூலமாகவும், கண்கள் மூலமாகவும் கவர்ந்திழுக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான பணியை திறம்பட செய்திருக்கிறார்.

காமெடித்தனம் கலந்த வில்லனாக வரதன் கதாபாத்திரத்தில் மிரட்ட முயற்சித்திருக்கிறார் ராஜேஷ் பாலச்சந்திரன். அவரது அறிமுக காட்சியே, “யாருப்பா இவரு…” என்று யோசிக்க வைக்கிறது. அதை தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும், சில இடங்களில் சிரிக்க வைத்து விடுகிறது.

காட்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவராஜ் சுப்பிரமணியம் ஆகியோர் புதியவர்களாக இருந்தாலும், தங்கள் மீது கவனம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார்கள்.

லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவில் குறிப்பிட்ட வண்ணங்களும், புதுமையான கோணங்களும் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, பிளாக் காமெடி ஜானர் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் தனி கவனம் பெறவில்லை என்றாலும், பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிரேம்.பி, இயக்குநர் சொல்ல நினைத்ததை திரையில் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார்.

காதல் கதை என்றாலும் அதை வழக்கமான பாணியில் சொல்லாமல் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரவீன் கே.மணி, பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேசியிருப்பது பாராட்டுக்குரியுது.

வெறும் காதல் கதையாக மட்டும் இன்றி, வில்லன் குழுவினர் மூலம் பிளாக் காமெடி ஜானரையும் சேர்த்து அமைத்திருக்கும் திரைக்கதை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.

காதல், காமம், உறவு உள்ளிட்ட ஏகப்பட்ட விசயங்களை இயக்குநர் பேசியிருப்பதால், சில விசயங்களை புரிந்துக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் திணறுகிறார்கள். அதே சமயம், கிளைமாக்ஸில் இயக்குநர் வைத்த காட்சி ஒரு கோணத்தில் பார்த்தால் அபத்தமானதாக இருந்தாலும், அதை வேறு கோணத்தில் யோசிக்க வைத்து, முடிவை ரசிகர்களிடமே விட்டுவிட்டுவது இயக்குநரின் சாமர்த்தியத்தை காட்டுகிறது.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.