
சென்னையில் வாழும் பேச்சிலர் வாழ்க்கையின் சோகம் – சுகம் தான் இரண்டு மணிநேர படமாக மாறியிருக்கிறது. பேச்சிலர்களுக்கு ரூம் கொடுக்கும் புண்ணியவான்களும் சென்னையில் இருக்கிறார்கள் என்றும் அந்த புண்ணியத்தை அவர்களை செய்யவிடாமல் தடுப்பதற்கென்றே அவதாரம் எடுத்த பேச்சிலர்களும் இருக்கிறார்கள் என்பதையும் கலகலப்பாக, அதேசமயம் கொஞ்சம் வலியுடன் சொல்ல முயற்சித்து நம்மை ‘அட என ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
பாபி சிம்ஹாவை வைத்து படத்தை பூஸ்ட் அப் பண்ணினாலும் படத்தின் ஹீரோ யார் என்றால் அது லிங்கா தான்.. சொல்லப்போனால் வில்லனும் அவரே.. பெண்களிடம் காதல் மொழி பேசி,, அவர்களை வசப்படுத்தி, தனது ரூமிற்கு அழைத்து வந்து, நினைத்ததை முடிக்கும்போது ‘அட.. நம்ம ரூமில் கூட இப்படி ஒருத்தன் இருந்தானேப்பா’ என பலருக்கும் சொல்லத்தோன்றும். நீண்ட நாட்கள் மசியாத ஒரு பெண்ணை அடையபோகும் சுகத்திற்காக, அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத தகவல் கேள்விப்பட்டும் ஊருக்கு கிளம்பும் பயணத்தை அவர் தள்ளிப்போடுவது பொட்டில் அடிக்கும் யதார்த்தம்.
சிம்ஹாவுக்கு வேலை குறைவுதான்.. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவில் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்.. எழுதுகிறார்.. இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறார் என்கிற ரேஞ்சில் அந்த ஒரு வேலை மட்டும் தான் அவருக்கு. மற்றபடி சக நண்பர்களால் ஏற்படும் சில்லித்தனமான பிரச்சனைகளால் தங்கியிருக்கும் அறையை அடிக்கடி மாற்றுவதும், ஹவுஸ் ஓனருக்கு பயந்து நள்ளிரவில் ரூமிற்கு வந்து அதிகாலையில் வெளியேறுவதும் என சிம்ஹா சாதிக்கும் பிரச்சனைகள், இன்றைக்கு பெரிய ஆளாக வலம் வரும் பலரும் சந்தித்த அவலங்கள் தான். புதியவர்கள் பலரும் இன்றும்கூட சந்தித்துவரும் பிரச்சனைதான்.
கதாநாயகிக்கான வழக்கமான க்ளிஷேக்களை உடைத்து, ஏற்கனவே விவாகரத்து ஆன பெண்ணாகவும், வேலை வாங்கி தருவதாக சொன்ன காதலனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தன்னை இழக்கும் அப்பாவி பெண்ணாகவும் சரண்யாவின் நடிப்பு அபாரம். அண்ணன் பையனுக்கு சைக்கிள் வாங்கமுடியாமல் ஊருக்கு செல்வதை தள்ளிப்போடும் பிரபஞ்ச்யனின் நடிப்பும், அவரது சலம்பலும் படு எதார்த்தம் பிளஸ் கலகலப்பு.
ஒரு புதிய முயற்சியாக இந்தப்படத்தை இயக்கியுள்ள மருதுபாண்டியன் நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான். இடைவேளைக்கு முன் வரை கதையோட்டத்தில் பயணித்தவரை, பாபி சிம்ஹாவின் தற்போதைய புகழும், அவரது கால்சீட்டும் நன்றாகவே அலைக்கழித்துள்ளது தெரிகிறது. ஒரு நல்ல கதையின் க்ளைமாக்ஸை எதற்காக சினிமாத்தனமான அவசர கோலத்தில் முடித்தார் என்பது புரியவில்லை.. ஆனால் புதிய முகங்களை வைத்து போரடிக்காமல் கதை சொல்வதில் இயக்குனர் வெற்றிக்கோட்டை தொட்டுள்ளார் என்று தாரளமாக சொல்லலாம்.
Comments are closed.