’பூகம்பம்’ விமர்சனம்

131

நடிகர்கள் : இஷாக் உசைனி, ஹேமா, பிரியா
இசை : சதாசிவ ஜெயராமன்
ஒளிப்பதிவு : தயாள் ஓஷோ & தேவராஜ்
இயக்கம் : இஷாக் உசைனி
தயாரிப்பு : ஐ இண்டர்நேஷ்னல் – இஷாக் உசைனி

சிறு வயதில் தந்தை மற்றும் தம்பியை பிரிந்து ஆதரவற்ற இல்லத்தில் வளரும் அண்ணன் இஷாக் உசைனி, தனது தந்தையையும், அவருடன் வாழும் தம்பியையும் பழிவாங்க தேடுகிறார். அதே சமயம், சிறு வயதில் தொலைந்து போன தனது அண்ணனை பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும் தம்பி இஷாக் உசைனி, என்றாவது ஒருநாள் அண்ணனை சந்தித்து விடுவோம், என்ற நம்பிக்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

தம்பி மீது கொலை வெறியோடு இருக்கும் அண்ணன் இஷாக் உசைனியும், அண்ணன் மீது அதீத பாசத்தோடு இருக்கும் தம்பி இஷாக் உசைனியும், அரசியல் மற்றும் காதல் மூலம் எதிரிகளாக சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அண்ணன் – தம்பி என்று தெரியாமலேயே இருவரும் மோதிக்கொள்ள, உண்மை தெரிந்த பிறகு என்ன ஆனது ?, குடும்பத்தை விட்டு இஷாக் உசைனி பிரிந்தது ஏன் ? ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.

தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி கொற்கை பாண்டியன் மற்றும் கல்லூரி மாணவர் பிரபாகரன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் நாயகன் இஷாக் உசைனி. அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களிலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே இருக்கும் வேற்றுமையை நடிப்பிலும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் இஷாக் உசைனி, கத்தி சுத்துவது, இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது என ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

பிரியா மற்றும் ஜூலி என்ற கதாபாத்திரங்களில் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இரண்டு நடிகைகளும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

சாத்தான் வழிபாட்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், கல்லூரி மாணவர்களாக நடித்தவர்கள் என அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சதாசிவ ஜெயராமனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் தயாள் ஓஷோ மற்றும் தேவராஜ் ஆகியோரது ஆடம்பரம் இல்லாத காட்சியமைப்பும், கிடைத்த லொக்கஷன்களை வைத்து காட்சிகளை படமாக்கிய விதமும் பட்ஜெட்டுக்கு ஏற்ப பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இஷாக் உசைனி, அரசியல் களத்தில் ஆக்‌ஷன் திருவிழாவை நடத்தியிருக்கிறார்.

காதல், காமெடி, அண்ணன் – தம்பி செண்டிமெண்ட் ஆகியவற்றுடன் அரசியலில் மாணவர்களின் பங்களிப்பு பற்றியும் பேசி கமர்ஷியல் படத்தில் சில நல்ல கருத்துகளை சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

குறைகள் சில இருந்தாலும், தான் சொல்ல வந்த கதையை, தனக்கு கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு எளிமையாகவும் சில இடங்களில் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, கிராபிக்ஸ் காட்சிகளையும் நேர்த்தியாக கையாண்டு ’பூகம்பம்’ படத்தை முழுமையான பொழுதுபோக்கு படமாக படைத்திருக்கிறார் இஷாக் உசைனி.

ரேட்டிங் 2.2/5

Comments are closed.