நீ நடிகனா.? இல்ல மெக்கனிக்கா..? – கமலை செல்லமாக குட்டிய இயக்குனர் சிகரம்..!

105

இன்று காலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது உத்தமவில்லன் படம் பற்றியும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பற்றியும் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார் கமல். அவர் பேசியவற்றில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் சில..

கமலை அவசரப்படுத்திய இயக்குனர் சிகரம்

இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மார்க்கதரிசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் அவரை இந்த படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்டபோது, யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டு அதன்பிறகுதான் ஓ.கே. சொன்னார். 10 நாட்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். படப்பிடிப்பை சீக்கிரமாக முடி என்று என்னை அவசரப்படுத்திக் கொண்டே இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் டப்பிங்கை சீக்கிரமாக முடி என்று அவசரப்படுத்தினார். டப்பிங் முடிந்ததும், படத்தை எப்போது காட்டப்போகிறாய் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்

நீ நடிகனா.? இல்ல மெக்கனிக்கா..?

டெக்னாலஜி வளரும்போது அதை நாம் அப்டேட் பண்ணிக்கொள்ளவேண்டும்.. 15 வருடத்திற்கு முன் செய்யவேண்டிய சிலவற்றை இப்போதுதான் செய்கிறோம். புன்னகை மன்னன் படப்பிடிப்பின்போது ஒரு பாடல் காட்சியை வாறு முறையில் படமாக்கினால் நன்றாக இருக்கும் என சொன்னேன்.. உடனே என்னிடம் நீ எதையாவது சொல்லி நாளை இழுத்துவிடாதே.. அப்புறம் நீ தான் எக்ஸ்ட்ராவா பத்து நாள் கால்ஷீட் தரணும் என்றார்.

அதுமட்டுமல்ல, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.. நான் வர்ற வரைக்கும் இத நீயே டைரக்ட் பண்ணிடு” என என்னிடம் ஒப்படைத்துவிட்டார். சிலநேரம் அவர் அப்படித்தான்.. நான் கேமராவை நோண்டுவதை பார்த்துவிட்டு “எண்டா நீ என்ன நடிகனா..? இல்ல மெக்கனிக்கா..? என செல்லமாக கடிந்துகொண்டார். சொன்னபடி கேமராவில் சின்னசின்ன வேலைகளை செய்து, “மாமாவுக்கு குடுமா குடுமா” என்கிற பாடலை படமாக்கினோம்.

உத்தமனும் வில்லனும் நானேதான்

இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. இதில் உத்தமனும் நான்தான். வில்லனும் நான்தான். இந்த படத்தை எந்தவொரு நடிகர் பார்த்தாலும், அந்த நடிகரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இது பிரதிபலிக்கும். வில்லுப்பாட்டு இந்த படத்தில் ஒரு முக்கிய இடம்பெற்றுள்ளது. வில்லுப்பாட்டு பாடுபவன் கூட வில்லன் தான் என்பதால் இதில் நான் தான் வில்லன்.

சென்சாருக்கு உரிமையில்லை

திரையுலகில் ஒரு கலைஞனின் படைப்புகளை சென்சார் போர்டு அதைதூக்கு, இதைவேட்டு என சொல்வதற்கு உரிமையில்லை. இதை ஒரு கலைஞா என்கிற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.. அதேபோல பெரிய படங்கள் இன்னன்ன தேதிகளில் தான் வரவேண்டும் என சொல்வது.. சிட்டிக்குள் ஹெவி வெஹிகிள் வாகனங்கள் தினமும் ஒரு மணி நேரம் தான் நுழையவேண்டும் என்று சொல்வது மாதிரிதான். அப்புறம் அவர்கள் எப்படி பிசினஸ் பண்ணுவதாம்.

ஆஸ்கர் பிலிம்சைத்தான் கேட்கவேண்டும்

விஸ்வரூபம்-2 எதனால் வெளியாக தாமதமாகிறது என எனக்கு புரியவில்லை. தயாரிப்பாளரும் நானும் பார்த்துக்கொண்டால் ஹலோ..குட்மார்னிங் என சொல்லுகிற நட்பில் தான் இருக்கிறோம்.. தாமதத்திற்கு அவர் சொல்லும் காரணங்கள் எனக்கு புரியமாட்டேன் என்கிறது. ஆனால் என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டிருக்க முடியாது. நான் நடிக்க வேண்டிய படங்களை எல்லாம் சீக்கிரம் நடித்துவிடவேண்டும் என்பதுதான் என் ஆசை.

இவ்வாறு பல சுவையான தகவல்களை கமல் பகிர்ந்துகொண்டார்.

Comments are closed.