’அன்னபூரணி’ விமர்சனம்

55

நடிகர்கள் : நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, ரெடின் கிங்ஸ்லி
இசை : தமன்.எஸ்
ஒளிப்பதிவு : சத்யன் சூரியன்
இயக்கம் : நிலேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு : ஜீ ஸ்டுடியோஸ், நாட் எஸ்ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ்

ஸ்ரீரங்க பிராமண குடும்பத்து பெண்ணான நயன்தாரா, சிறு வயதில் இருந்தே இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், தங்களது ஆச்சாரமான குடும்பத்திற்கு அது சரிபட்டு வராது என்று கூறி அவரது தந்தை ஆரம்பத்திலேயே தடை போடுகிறார். தந்தையின் தடையை மீறி அவருக்கு தெரியாமல் சமையல் கலை படிப்பு படித்து வரும் நயன்தாரா, தனது லட்சியப் பாதையில் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதிலும் முக்கியமாக உடல் ரீதியாக அவருக்கு ஏற்படும் பாதிப்பால் இனி அவரால் சுவையாக சமைக்கவே முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. அதில் இருந்து அவர் மீண்டு வந்து சாதித்தாரா?, இல்லையா? என்பது தான் ‘அன்னபூரணி’-யின் கதை.

அன்னபூரணி என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்து ரசிகர்களை ஈர்க்கும் நயன்தாரா, தனது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தனது லட்சியத்தில் ஜெயிக்க வேண்டும் அதே சமயம் அப்பாவுக்கு பிடிக்காத விசயங்களை செய்யக் கூடாது என்பதால் முடிவு எடுக்க முடியாமல் திணறும் காட்சிகளில் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி பிடித்து நடிக்கும் நயன்தாரா இந்த அன்னபூரணி மூலம் மீண்டும் ஒரு முறை தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துள்ளார்.

நயன்தாராவின் சிறுவயது தோழனாக தொடங்கி அவரது வாழ்க்கை இணையாகும் ஒரு கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருக்கிறார். நயன் கூடவே இருந்தாலும் தன் காதலை சொல்ல தடுமாறுவது, தூரமாக இருந்து அவரை ரசிப்பது, அவர் துவண்டு போகும் நேரத்தில் அவருக்கு தைரியம் சொல்வதோடு, அவர் தனியாக இருக்க நினைப்பதை அறிந்துக்கொண்டு அவரை விட்டு விலகுவது என்று நயன்தாராவின் கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் ஜெய்.

இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக நடித்திருக்கும் சத்யராஜின் கதாபாத்திரம் மற்றும் அவரது அனுபவமான நடிப்பு படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். தனது ஆச்சாரத்திற்கு களங்கும் ஏற்படுத்திய மகளால் ஒவ்வொரு முறையும் தலைகுணியும் போதும் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல், தனது வருத்தத்தையும், கோபத்தையும் தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கும் கார்த்தி குமார், வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி பல இடங்களில் வந்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லை. சுரேஷ் சக்ரவர்த்தி, ரேணுகா, குமாரி சச்சி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

சத்யன் சூரின் ஒளிப்பதிவு களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நயன்தாராவின் வயது முதிர்வை மறைக்க அதிகம் மெனக்கெட்டிருப்பது பல இடங்களில் தெரிந்தாலும், அவர் மிக நேர்த்தியாக சமாளித்திருக்கிறார்.

தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. ”உலகை வெல்ல போகிறாள்” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது.

எளிமையான கதைக்கருவுக்கு மிக எளிமையான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, தந்தை – மகள் இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான பந்தத்தையும், பாசத்தையும் அழகியலோடு சொல்லியிருக்கிறார்.

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் பல துறைகளில் சாதித்தாலும், இன்னமும் அவர்கள் தொட்டுப்பார்க்காத துறைகள் இருக்கத்தான் செய்கிறது என்றும், அதில் அவர்கள் சாதிக்க நினைத்தால், அவர்களுக்கான தடைகள் தற்போதும் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, அந்த தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும் கொடுத்து பாராட்டு பெறுகிறார்.

பிரியாணி சமைப்பதற்கு முன்பு இஸ்லாம் மதப்படி பிரார்த்தனை செய்வதால் பிரியாணி சுவையாக இருப்பதாக சொல்லும் கருத்து சற்று நெருடலாக இருந்தாலும், “எந்த கடவுளும் மாமிசம் சாப்பிட கூடாது என்று சொல்லவில்லை, அது அவர் அவர் விருப்பம்” போன்ற டிரைலர்கள் அனைத்து தரப்பினரையும் கைதட்ட வைக்கிறது.

திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் பழைய பாணியில் இருந்தாலும், முழு படமாக பார்க்கும் போது இந்த ‘அன்னபூரணி’ அனைவரையும் நிச்சயம் கவர்ந்திடுவார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.