யார் இவன் – விமர்சனம்

திருமணம் செய்த மறுநாளே மனைவியை கொன்றதாக போலீஸாரால் கைது செய்யப்படுகிறார் கபடி வீரரான சச்சின். சச்சினின் மாமனார் பிரபு கொடுத்த பிரஷர் காரணமாக இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு என்கவுன்டர் அதிகாரி கிஷோரிடம் கொடுக்கப்படுகிறது. சச்சின். ஆனால் கோவா சிறையில் இருக்கும் ஜெயில் அதிகாரி, சச்சின் மீதுள்ள முன்பகை காரணமாக அவரை சிறையிலேயே போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்.

சச்சின் தனது காதல் மனைவியை கொல்ல காரணம் என்ன..? ஜெயில் அதிகாரி சச்சினை போட்டுத்தள்ள துடிப்பது ஏன்..? கிஷோரின் விசாரணையில் இந்த கொலைக்கான முடிச்சு அவிழ்ந்ததா..? இத்தனை கேள்விகளுக்கும் பரபரப்பான விடை படத்தில் இருக்கிறது.

பாலிவுட் நடிகரின் தோற்றத்தில் படம் முழுதும் கெத்தாக வலம்வருகிறார் சச்சின்.. படம் முழுதும் முகத்தில் பெரிதாக உணர்ச்சியை காட்டாமல் நடித்திருப்பது ஒரு குறைதான் என்றாலும், கதையோட்டத்தில் அது பெரிதாக தெரியவில்லை.. கபடி விளையாட்டிலும் சண்டைக்காட்சிகளிலும் ஓரளவு பளிச்சிடுகிறார்.

நாயகி ஈஷா குப்தா மாடல் அழகிபோல உலாவந்தாலும் அவரது தோழியாக வரும் தன்யா பாலகிருஷ்ணன் தான் நம் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறார். பிரபுவிடம் ஒருநாள் மட்டும் கால்ஷீட் வாங்கி படமாக்கியதுபோல ஒரே பில்டிங்கில் வைத்தே அவரது காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்.. அவரது கேரக்டரில் வைத்துள்ள ட்விஸ்ட்டை யூகிப்பது சிரமம் தான்.

ரப் அன்ட் டப் அதிகாரியாக வரும் கிஷோர், முரட்டுத்தனமான ஜெயிலர் அதிகாரி, சச்சினுக்கு ஆதரவான டெல்லிகணேஷ், மனநல டாக்டராக வரும் பிரதாப் போத்தன் என பலரும் பொருத்தமான தேர்வாகவே தெரிகிறார்கள். சதீஷின் காமெடி தான் கொஞ்சம் படுத்துகிறது.

ஆரம்பத்தில் ஒரு கொலை, அதை கதாநாயகன் ஏன் செய்தார் என ஆவலை தூண்டிவிட்டு விடுகிறார்கள்.. ஆனால் அதற்காக பல காட்சிகளை திசைமாறி நகர்த்தி நம்மை குழப்பவும் செய்கிறார்கள். கபடி காட்சிகளையும் ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் விறுவிறுப்பாகவே படமாக்கியிருக்கிறார்கள்.. படத்தின் கடைசி இருபது நிமிடங்களில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக அடுக்குகிறார்கள்..

இயக்குனர் சத்யா திரைக்கதையில் நிலவும் குழப்பங்களை கொஞ்சம் சரி செய்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

KishoreSachinSathishYaar Ivanகிஷோர்சச்சின்பிரபுயார் இவன்