வேதாளம் – விமர்சனம்


சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குவதோடு சூரியின் கால்டாக்சி நிறுவனத்தில் டிரைவர் வேலையிலும் சேர்கிறார். ஒருகட்டத்தில் வக்கீலான ஸ்ருதிஹாசனுடன் அஜித்திற்கு பழக்கம் ஏற்படுகிறது.

ஸ்ருதியின் அண்ணனான அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்பட. இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இன்னொரு பக்கம் கொல்கத்தாவில் போதை மருத்து கடத்தல் கும்பலை அழித்துவரும் அஜித், கடத்தல் கும்பலில் இருவரை கொலைசெய்வதை ஸ்ருதி பார்த்துவிடுகிறார்.

இதற்கான காரணத்தை ஸ்ருதியிடம் விலக்கும்போதுதான், லட்சுமிமேனன் தன் தங்கை இல்லை என்று அஜித் கூற அதிர்ச்சியாகிறார் ஸ்ருதி. அப்படியானால் லட்சுமி மேனன் யார்? எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார்? என்பதுதான் மீதிக்கதை.

அஜித்தின் வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைத்தாலும் சில சமயங்களில் செயற்கைத்தனம் இழையோடுவதையும் நன்றாகவே கவனிக்க முடிகிறது.. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. “நீ ஒரு கெட்டவன், நான் ஒரு கேடுகெட்டவன்…” என பேசுகின்ற பஞ்ச் டயலாக் பொருத்தமாக இல்லை என்றாலும் கூட அதை அஜித் பேசுவதாலேயே கைதட்டல் அள்ளுகிறது.

வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை இவர் கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது. இருந்தாலும் நிறைய இடங்களில் லட்சுமி மேனன் ஸ்கோர் பண்ணிவிடுகிறார். கதாநாயகியாக மற்ற படங்களில் நடித்ததை விட இந்தப்படத்தில் தங்கையாக நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் லட்சுமி மேனன்.

வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக தம்பிராமையா, அப்புக்குட்டி, மயில்சாமி என ‘வீரம்’ கூட்டணிக்கு இதிலும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனிருத் வழக்கம் போல் தெறி மாஸ். குறிப்பாக ‘ஆலுமா….’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. ஆனால் பாடல்கள் தான் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

சிறுத்தை சிவா இந்தமுறை ஹரியின் ரூட்டிற்கு மாறி வேகம் எடுத்திருக்கிறார். முந்தைய படத்தை போலவே அஜித்திடம் திறமையாக வேலை வாங்கி அதை அவரது ரசிகர்களுக்கு வேண்டிய பக்குவத்தில். கொடுத்திருக்கிறார். ஒரு பக்கம் கொடூர வில்லன்களுடன் போராட்டம் என்றாலும் கூட, அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கான ‘தல’ப்பாக்கட்டு பிரியாணி தான் இந்த வேதாளம்.

AjithAM RathnamSivaSruthiVethalam