‘வீராயி மக்கள்’ விமர்சனம்

நடிகர்கள் : வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா
இசை : தீபன் சக்கரவர்த்தி
ஒளிப்பதிவு : எம்.சீனிவாசன்
இயக்கம் : நாகராஜ் கருப்பையா
தயாரிப்பு : ஒயிட் ஸ்கீரின் பிலிம்ஸ் – சுரேஷ் நந்தா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உறவுகளின் உண்ணதத்தை போற்றும் திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘வீராயி மக்கள்’ மனதை தொடுகிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

அண்ணன் வேல ராமமூர்த்தியும், தம்பி மாரிமுத்துவும் ஒரே தெருவில் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருப்பதோடு, பகை வளர்த்துக் கொண்டும் வாழ்கிறார்கள். இவர்களைப் போல் இவர்களது பிள்ளைகளும் பகை உணர்வோடு இருக்க, இந்த நிலையை மாற்ற வேல ராமமூர்த்தியின் இளைய மகன் நாயகன் சுரேஷ் நந்தா முயற்சிக்கிறார். அவரது முயற்சியினால் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்தார்களா?, அவர்கள் பிரிந்தது ஏன்? என்பதை மக்களின் மனதுக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘வீராயி மக்கள்’.

வேல ராமமூர்த்தி வழக்கம் போல் மிடுக்கான தோற்றத்தோடும், கோபமான பார்வையோடும் நடித்திருந்தாலும், உடன் பிறந்தவர்களுக்காக வாழும் பாசக்கார அண்ணன் என்ற மற்றொரு பரிணாமத்தில் ரசிகர்களின் மனங்களை வென்றுவிடுகிறார்.

வேல ராமமூர்த்தியின் தம்பியாக நடித்திருக்கும் மாரிமுத்து, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். கோபத்தை வெளிக்காட்டுவதாக இருந்தாலும் சரி, சொந்தங்களை உதறும் காட்சிகளாக இருந்தாலும் சரி, அத்தனை இடங்களையும் தனது இயல்பான நடிப்பு மூலம் சர்வசாதாரணமாக கடந்து செல்லும் இவரது இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறார்.

நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, கதையின் நாயகனாக காட்சிகளுக்கு எது தேவையோ அதை அளவாக வெளிப்படுத்தி கவர்கிறார். படத்தை அவரே தயாரித்திருந்தாலும், எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்தாமல் இயல்பாக நடித்திருப்பது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அத்தை மகளை பார்த்ததும் அவர் மீது காதல் கொண்டு காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்பவர், அண்ணனை காப்பாற்றுவதற்காக அடிதடியில் இறங்கி ஆக்‌ஷனிலும் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நந்தனா, கிராமத்து கதைக்கு ஏற்ற முகம். காதல் காட்சிகளில் நாயகனுக்கு இணையாக நடிப்பில் அசத்துபவர், பாடல் காட்சிகளில் ஜொலிக்கவும் செய்திருக்கிறார்.

அண்ணன்களின் பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக நடித்திருக்கும் தீபா சங்கர் வழக்கம் போல் ரொம்பவே ஓவராக நடித்திருக்கிறார். மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, கணவரின் உடன்பிறப்புகள் ஒற்றுமையாக இருக்கவே கூடாது, என்று சபதம் ஏற்ற பெண்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு அளவாக இருந்தாலும், மேக்கப் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள், ஊர் மக்களாக வருபவர்களும் மண்ணின் மனிதர்களாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் இசையில் பாடல்களில் கிராமத்து மனம் வீசுகிறது. அனைத்து பாடல்களும் புரியும்படியும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசையும் அளவு. ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன் தனது கேமரா மூலம் எதார்த்தமான கிராமத்து வாழ்க்கையையும், அம்மக்களின் உணர்வுகளையும் ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

இப்படத்தின் மூலம் பிரிந்த உறவுகளை நினைத்து பார்க்க வைத்திருக்கும் இயக்குநர் நாகராஜ் கருப்பையா, கதை சொல்லல் மற்றும் திரைக்கதை நகர்த்தல் மூலம் பாரதிராஜா படத்தை பார்த்த உணர்வை கொடுக்கிறார்.

கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மிக நேர்த்தியாக திரையில் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் நாகராஜ் கருப்பையா, பல இடங்களில் உடன் பிறந்தவர்களை நினைத்து பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

குடும்பத்தோடு அவசியமாக பார்க்க வேண்டிய படமாக உள்ள இந்த ‘வீராயி மக்கள்’ மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.

ரேட்டிங் 3.5/5

tamil movie veerayi makkal reviewveerayi makkal movie reviewveerayi makkal reviewதமிழ்ப் படம் வீராயி மக்கள்வீராயி மக்கள் விமர்சனம்வீராயில் மக்கள் திரைப்பட விமர்சனம்