நடிகர்கள் : சந்தோஷ் பிரதாப், பவ்யா ட்ரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த், ஆர்யன்
இசை : டி.இமான்
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி
இயக்கம் : மலர்விழி நடேசன்
தயாரிப்பு : மலர்விழி நடேசன், ஷிவானி சுப்பிரமணி
இரவு நேரத்தில் நிகழும் ஒரு எதிர்பாராத சம்பவம், ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் ‘சிக்னல் அட் 11.30’.
தொழிலதிபரான சந்தோஷ் பிரதாப், அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குச் செல்கிறார். வழியில் இரவு 11.30 மணிக்கு போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் அவருக்கு ஒரு வித்தியாசமான காட்சி தென்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்லும் இளம்பெண் ஒருவரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வரும் சில இளைஞர்கள் பின்தொடர்ந்து துரத்துகின்றனர். இதைக் கவனிக்கும் சந்தோஷ் பிரதாப், அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற எண்ணத்தில் அவர்களைப் பின்தொடர்கிறார். ஆனால், குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது அந்தப் பெண்ணின் வாகனம் மட்டுமே அங்கு இருக்கிறது. அவரைக் காண முடியாததால், நடந்த சம்பவத்தை காவல்துறையிடம் தெரிவித்து விட்டுச் செல்கிறார்.
மறுபுறம், வேலைக்குச் சென்ற தனது மகள் பவ்யா ட்ரிகா இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் பதற்றமடைகிறார். பல இடங்களில் தேடியும் மகளைப் பற்றிய தகவல் கிடைக்காத நிலையில், காவல்துறையின் உதவியை நாடுகிறார். போலீசாரும் அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். ஆனால், காணாமல் போனதாகத் தேடப்படும் பவ்யா ட்ரிகா, சந்தோஷ் பிரதாப்பின் வீட்டிலேயே அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் ஏன் அங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்? சந்தோஷ் பிரதாப்பின் உண்மையான பின்னணி என்ன? அந்த இரவு நிகழ்ந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்குப் படிப்படியாக விடை அளிக்கிறது திரைக்கதை.
கதையின் மையப்புள்ளியாக பயணிக்கும் சந்தோஷ் பிரதாப், தனது நடிப்பின் மூலம் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் உருவாகும் அச்சம், குழப்பம், பதற்றம் ஆகியவற்றை முகபாவனைகளிலும் உடல்மொழியிலும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். கதாபாத்திரத்தின் பின்னணி தெரியவரும் தருணங்களில் அவரது நடிப்பில் வெளிப்படும் உணர்ச்சிகரமான மாற்றங்கள் பாராட்டும்படி அமைந்துள்ளன.
பவ்யா ட்ரிகா, தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். கதாநாயகி என்ற வழக்கமான எல்லைகளுக்குள் சிக்காமல், கதையின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சூழலையும் அதன் மனநிலையையும் அளவான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பூஜிதா பொன்னடா, காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் என வழக்கமான கமர்ஷியல் அம்சங்களில் இடம்பெற்றாலும், கதையின் முக்கியமான திருப்பங்களுடன் தொடர்புடைய கதாபாத்திரமாகவும் கவனம் பெறுகிறார்.
ஜெயப்பிரகாஷ், தந்தை கதாபாத்திரத்தின் வழியாக தனது அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷும், முனிஷ்காந்தும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்களது திரை இருப்பு கதையின் நகர்வுக்கு துணையாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, இரவு நேரக் காட்சிகளுக்கு தனித்துவமான காட்சி மொழியை உருவாக்கியிருக்கிறார். இரவின் மர்மமான சூழல், கொடைக்கானலின் இயற்கை எழில், கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகள் என அனைத்தையும் நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, பதற்றத்தை அதிகரிக்கும் இரவு நேரக் காட்சிகள் படத்தின் திரில்லர் தன்மையை வலுப்படுத்துகின்றன.
டி.இமானின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு அழகு சேர்க்கின்றன. தந்தை – மகள் உறவின் நெருக்கத்தை உணர்த்தும் ‘ஜோ ஜோ மா..’ பாடலும், பிரிவின் வலியைப் பேசும் ‘போக போக போகாதே…’ பாடலும் கேட்பதற்கு இனிமையாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் தேவையற்ற ஆரவாரமின்றி, காட்சிகளின் தீவிரத்திற்கேற்ப பயணித்து கதைக்கு வலு சேர்க்கிறது.
படத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல், மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படும் வகையில் படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். பல்வேறு சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் இணைத்து நகரும் திரைக்கதையில் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் காட்சிகளை ஒருங்கிணைத்திருப்பது சிறப்பு.
எழுதி இயக்கியிருக்கும் மலர்விழி நடேசன், ஒரு சாதாரண சாலைச் சம்பவத்தைப் பல்வேறு மர்மங்களும் உளவியல் சார்ந்த கேள்விகளும் நிறைந்த திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். இரவு 11.30 மணிக்கு தொடங்கும் ஒரு நிகழ்வு, அடுத்தடுத்து எத்தகைய எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது என்பதை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார்.
குற்றப் பின்னணியிலான திரில்லர் கதையாக இருந்தாலும், அதற்குள் மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் இணைத்திருப்பது படத்தின் தனிச்சிறப்பு. குறிப்பாக, தந்தை – மகள் இடையிலான பாசம், வாழ்க்கையில் தனிமையைப் போக்க வந்த துணையால் ஏற்படும் மகிழ்ச்சி, அந்த உறவு முறிவதால் உருவாகும் மனவேதனை போன்ற நுணுக்கமான உணர்வுகளை கதையோடு கலந்து சொல்லியிருப்பது திரைக்கதைக்கு கூடுதல் பரிமாணத்தை அளிக்கிறது.
கதாபாத்திரங்களின் நடிப்பில் இயல்புத்தன்மையை வெளிக்கொண்டு வந்திருப்பதுடன், தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து கதையின் முக்கிய அம்சங்களை மையப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மர்மங்களை உடனடியாக வெளிப்படுத்தாமல், பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
மொத்தத்தில், எதிர்பாராத திருப்பங்கள், உளவியல் சார்ந்த மர்மங்கள், குடும்ப உறவுகளின் உணர்ச்சிகள் எனப் பல அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியிருக்கும் ‘சிக்னல் அட் 11.30’, வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.
ரேட்டிங் 3.5/5