சிகரம் தொடு – விமர்சனம்

 

அப்பாவின் விருப்பத்துக்காக போலீஸ் வேலையில் சேரும் ஹீரோ, நூதன முறையில் திருடும் ஏ.டி.எம் கொள்ளையன்.. இந்த இருவரும் ஒரு நேர்கோட்டில் சந்திப்பது தான் படத்தின் மையக்கரு.

விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக ஆகவேண்டும் என்பது அப்பா சத்யராஜின் ஆசை.. காதலி மோனல் கஜ்ஜாருக்கோ போலீஸ் மாப்பிள்ளை என்றால் அலர்ஜி. ஆனாலும் போலீஸ் வேலை தேடிவருகிறது. ஒரே மாதத்தில் வேலை பிடிக்கவில்லை என்று வெளியே வந்துவிடுகிறேன் என காதலிக்கு சமாதானம் சொல்கிறார் விக்ரம் பிரபு..

முப்பதாவது நாளில் அவரது தந்தை போராடி பிடித்து தந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள் இருவரை லாக்கப்பில் தள்ளுகிறார் விக்ரம். ஆளில்லா நேரம் தப்பிக்கும் கொள்ளையர்கள் சத்யராஜின் மீது கொலை தாக்குதல் நடத்திவிட்டு விக்ரமின் காதலியை கடத்துகிறார்கள்.. காதலியை மீட்க, தந்தையை தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுக்க விக்ரம் பிரபு எடுக்கும் அதிரடி நடவடிக்கை அவரை சிகரம் தொட வைத்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அறிமுகமாகி நான்காவது படத்திலேயே போலீஸ் அதிகாரியாக புரமோஷன் ஆகும் வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும் கூட, அதற்காக விக்ரம் பிரபு கடும் உழைப்பை கொட்டியிருப்பது நன்றாகவே தெரிகிறது. அவரது உயரம் அதற்கு கைகொடுக்கிறது. காதல் காட்சிகளைவிட ஆக்ஷனில் அதகளம் பண்ணுகிறார் விக்ரம் பிரபு.

கல்கத்தா ரசகுல்லா மாதிரி ஒரு இனிப்பான ஹீரோயினாக தமிழுக்கு கிடைத்துள்ளார் கதாநாயகி மோனல் கஜ்ஜார். கிளாமர், பேமிலி ரோல் இரண்டையும் நம்பி இவரிடம் கொடுக்கலாம். ஒரு காலை இழந்த, முன்னாள் போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ் கொள்ளையர்களை மடக்கிப்பிடிக்கும் இடம் பலே துணிச்சல்.

ஏ.டி.எம் கொள்ளையனாக இயக்குனர் கௌரவ் தனக்கென ஒரு பக்காவான ரோலை ஒதுக்கி, அதை திறம்படவும் செய்திருக்கிறார். சதீஷ், ஈரோடு மகேஷ் இருவரும் ஏரியா பிரித்து காமெடி பண்ணியிருக்கிறார்கள். சுவாமிநாதனின் வீட்டில் லொள்ளு’ மனோகர் திருடுவது சரியான கலாட்டா. டி.இமானின் இசையில் ‘டக்கு டக்கு’, ‘அன்புள்ள அப்பா’, ‘சீனு சீனு’ பாடல்கள் ஹிட் ரகம். விஜய் உலகநாத்தின் கேமரா இயக்குனரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நம்மையும் இழுத்து செல்கிறது.

இடைவேளைவரை வலுக்கட்டாயமாக கதையை நகர்த்தியுள்ளது தான் திரைக்கதையில் தெரியும் பலவீனம்.. ஆனால் இடைவேளைக்குபின் வேகம் கூட்டி அதை பேலன்ஸ் செய்திருக்கிறார்கள்.. ஏ.டி.எம் கொள்ளையர்கள் எந்த விதத்தில் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள் என டீடெய்லாக சொல்லி என மக்களை எச்சரித்துள்ள விதத்தில் சபாஷ் பெறுகிறார் இயக்குனர் கௌரவ்.

ஈரோடு மகேஷ்கே.எஸ்.ரவிகுமார்கௌரவ்சதீஷ்சத்யராஜ்சிகரம் தொடுசிகரம் தொடு – விமர்சனம்டி இமான்மோனல் கஜ்ஜார்விக்ரம் பிரபுவிஜய் உலகநாத்