ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜீவா, ஏதாவது ஒரு காரணத்தால் விலை போகாத வீட்டை வாங்கி, அதை ராசியான வீடாக்கி அதிக விலைக்கு விற்கிறார். அப்படி சேர்த்து வைத்த காசில் தனது நீண்டநாள் கனவான சொந்த வீடு வாங்கும் லட்சியமும் ஜீவாவுக்கு உண்டு. அதற்கேற்றவாறு ஜமீன் பங்களா ஒன்றில் பேயிருப்பதாக கதைகட்டிவிட்டு அதைகுறைந்த விலைக்கு தனக்கென வாங்குகிறார்..
தனது தாய் ராதிகா, இதுநாள் வரை அடைக்கலம் கொடுத்த தாய்மாமன் இளவரசு குடும்பத்தினருடன் அந்த பங்களாவில் ஜீவா குடியேற, சரியாக அதேநாளில் தம்பிராமையாவும் மனைவி தேவதர்ஷினி, மகள் ஸ்ரீதிவ்யாவுடன் இந்த பங்களா எனக்குத்தான் சொந்தம் என பங்கு சண்டைக்கு வந்து நிற்கிறார்..
பேய் இருக்கிறது என ஜீவா கதைகட்டிவிட்ட அந்த வீட்டில் உண்மையாகவே பேய் இருப்பது ஜீவாவுக்கு தெரியவருகிறது. பல வருடங்களுக்கு முன் தனது குடும்பத்தாரின் ஒற்றுமைக்காக தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ராதாரவி, அதே குடும்பத்தார் அந்த பங்களாவை பங்கு பிரிப்பதில் சண்டைபோட்டு மல்லுக்கட்டுவதை பார்த்து பேயாக மாறி அவர்களை துரத்துகிறார்.
இப்போது ஜீவா குடும்பமும் தம்பிராமையா குடும்பமும் இந்த பங்களாவுக்காக சண்டை போடுவதை பார்த்ததும் மீண்டும் உக்கிரமாகி அவர்களை துரத்த நினைக்கிறார். இந்த விஷயங்களை அறிந்துகொண்ட ஜீவாவால், ராதாரவியை சாந்தப்படுத்த முடிந்ததா, அந்த வீட்டை சிக்கலின்றி சொந்தமாக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.
நாயகன் ஜீவாவுக்கு ஏற்ற சரியான கேரக்டர் தான்.. ஸ்ரீதிவ்யாவுடன் காதல், யதார்த்தமாக ஏதாவது செய்யப்போய் சிக்கலில் மாட்டிக்கொள்வது என குறையில்லாமல் நடிப்பை வழங்கி இருக்கிறார். குறிப்பாக ஜீவாவின் வீடு குறித்த பிளாஸ்பேக் காட்சிகள் நெஞ்சில் அறையும் நிஜம். நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய வேலை இல்லை என்றாலும் நிறைவாகவே வந்து போகிறார்..
கலகலப்புக்கு சுருட்டை முடி கெட்டப்புடன் சூரி. ஜீவாவுடன் சேர்ந்து பேய்க்கதை கட்டவும், பின்னர் பேயை துரத்தவும் அவர் படும் பாடு சிரிப்பை வரவழைக்கின்றன.. அவருக்கு ஒரு ஜோடியையும் கொடுத்து ரொமான்ஸ் மூடில் வேறு இறக்கி விட்டுள்ளார்கள். போதாக்குறைக்கு ஒருபக்கம் பேய்க்கதை பரப்பும் மயில்சாமி, இன்னொரு பக்கம் பேயை விரட்டுவதாக கோவை சரளா இருவரும் போட்டு தாக்குகிறார்கள்..
பாசமான அம்மா ராதிகா பாஸ் மார்க் வாங்குகிறார். தம்பிராமையாவுக்கு படம் முழுவதும் வரும் ஆனால் சற்றே நெகடிவான கேரக்டர்.. அதிலும் தேவதர்ஷினியுடனான அந்த வாஷிங்மெஷின் காமெடிக்கு தியேட்டர் அதிர்கிறது.. நான் கடவுள் ராஜேந்திரனுக்கு இரண்டு நிமிட வேலைதான் என்பதால் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை.. ஆனால் டைட்டில் கார்டுக்கு முன் புகை, மதுவுக்கான வசனம் பேசுவதில் ஆரம்பத்திலேயே நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்.
நட்புக்காக ஆரம்ப காட்சிகளில் ஜெய் வந்துபோவது ஜிலீர் சஸ்பென்ஸ். படத்தின் மைய கதாபாத்திரமாக வரும் ராதாரவிக்கு இதில் பேயாக புரமோஷன் கொடுத்துள்ளார்கள்.. அவர் சம்பந்தமான பிளாஸ்பேக் மனதை உருகவைக்கிறது. அவரது மகளாக கொஞ்ச நேரமே வரும் கௌசல்யா அதிரவைக்கிறார். இதுநாள் வரை பல காரணங்களுக்காக பேய் மற்றவர்களை துரத்தி அடிப்பதை பார்த்திருக்கிறோம்.. ஆனால் குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்காக ஒரு பேய் களமிறங்கி இருப்பது புதுசு..
பேய்க்கதைக்கான கனத்தை பின்னணி இசையில் ஏற்றியுள்ளார் விஷால் சந்திரசேகர். சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவு பங்களாவின் இண்டு இடுக்கு விடாமல் சுற்றி வருகிறது. கலகலப்பாக அதே சமயம் கொஞ்சம் டெரர் கலந்து ஒரு பேய்க்கதையை சொல்ல முயற்சித்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஐக்.. பேய்க்கான பிளாஸ்பேக்கை பின்னியதில் கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.. தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா சம்பந்தப்பட்ட இரண்டு காட்சிகளில் பேய் ஆட்டம் காட்டும்போது த்கிளில் உறைய வைக்கிறார். இருந்தாலும் பேய் சம்பந்தமான காட்சிகளில் ஓரிரு இடங்களை தவிர இவரும் வழக்கமான க்ளிஷேக்களில் இருந்து தப்பமுடியாமல் தவித்திருப்பது தெரிகிறது..
இருந்தாலும் சம்மருக்கேற்ற ஜாலியான பொழுது போக்கு படம் தான் என்பதால் உடனே போடுங்கள் டிக்கெட்டை..