காதலித்து திருமணம் செய்த மனைவி ரென்யாவை அன்றிரவே ஹார்ட் அட்டாக்கில் பறிகொடுக்கிறார் அஜய். தாய் மற்றும் சகோதரியுடன் தனி வீட்டில் இருக்கும் அஜய்க்கு, அங்கே நிகழும் சில அமானுஷ்ய நிகழ்வுகள் தன் மனைவியின் ஆவி அந்த வீட்டில் சுற்றுவதாக தோன்ற வைக்கிறது.
நண்பனின் யோசனைப்படி ஒரு சயன்டிஸ்ட்டிடம் சென்று இறந்தபோன தன் மனைவியுடன் பேச முயற்சித்து, அதில் தோல்வியை தழுவுகிறார் அஜய்.. வாஸ்துப்படி வேறு வீடு மாற்றுகிறார்கள். ஆனாலும் திடீரென அவரது சகோதரியும் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடைகிறார்.
இந்த மரணங்கள் எதனால், இதன்பின்னால் இருப்பது என்ன, அஜய்யின் மனைவியின் ஆவிதான் இதை செய்கிறதா, அப்படியானால் அவர் மனைவி இறந்ததற்கு காரணம் என்ன என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது கடைசி இருபது நிமிட க்ளைமாக்ஸ்.
அஜய்யாக நடித்திருக்கும் அஷ்ரப்பிடம் ஒரு அறிமுக நடிகருக்கான பதட்டம் எதுவும் இல்லாமல் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. ஆசையுடன் காதலனுடன் வாழ வந்து திடீர் மரணத்தை தழுவும் அதிதி செங்கப்பா நமக்கு அதிர்ச்சி அளிக்கிறார்.. படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் திகில் படத்திற்கு உண்டான நடிப்பை வெளிப்படுத்தவே செய்திருக்கிறார்கள்.
படத்தின் விறுவிறுப்புக்கு இரண்டு பேர் இயக்குனர் பிரபு யுவராஜுக்கு துணை நின்றிருக்கிறார்கள். ஒருவர் பின்னணி இசையால் நம் இதயத்துடிப்பை எகிற வைத்த இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன்.. இன்னொருவர் தனது காமெராவால் எங்கெல்லாம் ஆடியன்சை மிரட்ட முடியுமோ அங்கெல்லாம் மிரட்டும் ஒளிப்பதிவாளர் சரவணன். குறிப்பாக இரவுக்காட்சிகளில் ஒவ்வொரு பிரேமும் திகிலுடன் அசத்துகிறது.
75 சதவீத படத்தை திக் திக் திகில் என மிரட்டலாக கொண்டு செல்கிறார் இயக்குனர் பிரபு யுவராஜ்.. நமக்கும் அவ்வப்போது பயம் வருகிறது. பயப்படுத்துவதற்கான சில வழக்கமான க்ளிஷேக்களும் உண்டு. ஆனால் நடக்கும் மரணங்களுக்கு அமானுஷ்யம் மூலமாகவோ, அல்லது விஞ்ஞானம் மூலமாகவோ தீர்வு சொல்லாமல் க்ரைம் கதைகளில் வரும் ட்விஸ்ட் போல முடித்திருப்பது மொத்த படத்தையும் டேமேஜ் பண்ணிவிடுகிறது.
குறிப்பாக ரெட் டோர் அதாவது சிவப்புக்கதவு என்கிற விஷயத்தை சொன்னவர்கள் அதன் மோளம் எதை சாதித்தார்கள் என்பதை சொல்லவேயில்லை.. இறுதியில் ஆவி சம்பந்தமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல கேள்விகள் அப்படியே அந்தரத்தில் நிற்பதும் ஒரு மைனஸ் தான்.. முக்கால்வாசிப்படம் வரை பயத்தில் மிரள வேண்டுமா..? அதற்கு கேரண்டி தருகிறது இந்த ‘ர’. தாராளமாக டிக்கெட் போடுங்கள்..