விபத்தில் அகால மரணமடைந்த இளம்பெண் பிசாசாக மாறி பின் தொடருவதுதான் கதை.. ஆனால் யாரை பின் தொடர்கிறார்.. அது ஏன்.. என்பதுதான் திரைக்கதையில் மிஸ்கின் கொடுத்திருக்கும் சுவராஸ்யம். விபத்தில் மரணிக்கும் பிரயாகா, தன்னை காப்பாற்ற, மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற வாலிபன் நாகாவைத்தான் கடைசியாக பார்த்தபடி, அவர் கையை பிடித்தபடியே கண்மூடுகிறார்.
பிரயாகாவின் மரணத்தை தொடர்ந்து நாகாவின் வீட்டில் நிகழும் சம்பவங்கள், அங்கே அமானுஷ்யமாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்த்துகின்றன.. ஆவியை கண்டுபிடிப்பதாக சொல்லிக்கொண்டு பணம் பறிக்க வரும் பெண்ணை, ஒரு காட்டு காட்டிவிட்டு தனது இருப்பை, அடையாளத்தை நாகாவுக்கு உணர்த்துகிறது பிரயாகாவின் ஆவி (அ) ஆத்மா (அ) பிசாசு.
நாகா அடுத்தகட்டமாக பிசாசை விரட்டியடித்தாரா, அல்லது அதன் ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றினாரா, அல்லது பிரயாகாவின் விபத்துக்கு காரணமானவனை கண்டுபிடிக்க துடிக்கும் அவரது தந்தை ராதாரவிக்கு உதவி செய்தாரா..? இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது க்ளைமாக்ஸ்.
ஒரு பக்கம் கண்ணை மறைத்தபடி நீண்ட முடி ஹேர் ஸ்டைலுடன் வரும் ஹீரோ நாகா, மிஸ்கினின் முந்தைய பட ஹீரோக்களை போல தலையை அவ்வப்போது ஒருச்சாய்த்தபடியே வலம் வருகிறார். உயிருடன் ஒரே ஒரு காட்சியில், அதிலும் விபத்து காட்சியில் மட்டும் பிரயாகாவின் முகம் கொள்ளை அழகு. ஆனால் அவருக்குத்தான் பிசாசாக கரி பூசிவிட்டார்களே.. பாவம்..
நாகாவின் இயல்பான அம்மாவாக வரும் கல்யாணி நடராஜன், பக்கத்து வீட்டு அக்கா வினோதினி என படம் நெடுகிலும் கதையின் பாத்திரங்கள் மட்டும் தெரிவதே படத்திற்கு பக்கபலம். ராதாரவிக்கு இதில் பவர்புல்லான, ஒரு பாசமுள்ள தந்தை வேடம்.. பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
இடைவேளைக்கு முன் வரை ஆவியின் இருப்பை உணர வைக்கும் காட்சிகள் நாம் பல படங்களில் பார்த்தது தான் என்றாலும் அதிலும் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார் மிஸ்கின். இடைவேளைக்குப்பின் பிரயாகாவின் மரணத்திற்கு காரணமானவன் யார் என தேடுவதில் இன்னும் வேகம் கூட்டுகிறார்.
ஆனால் அந்த கடைசி இருபது நிமிட க்ளைமாக்ஸ்.. பிசாசின் நடவடிக்கைகளுக்கும், நாகாவின் நடவடிக்கைகளுக்கும் ஒரு கோனார் நோட்ஸ் கொடுத்து விளக்கம் சொன்னால் தான் ஆச்சு என்கிற ரீதியில் படம் பார்த்து முடிந்ததும் ஆளாளுக்கு ஒரு விளக்கம் சொல்லிக்கொண்டு வெளியேறுகிறார்கள்.
படத்தின் பயம் காட்டும் காட்சிகளுக்கு, தனது பின்னணி இசையால் மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் அரோல் குரோலி. ரவிராயின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை மிரட்ட, இசையமைப்பாளருக்கு உதவி செய்திருக்கிறது. வழக்கம்போல மிஸ்கின் படத்தின் இரவு காட்சிகள் இதிலும் டிட்டோ..
எப்படியாவது தமிழ்சினிமாவுக்கு ஒரு நல்ல படத்தை, வித்தியாசமான, ஒரு புதிய பரிணாமத்தில் தந்துவிட வேண்டும் என மிஸ்கின் ஒவ்வொரு முறையும் பிரயாசைப்படுவார்.. இதிலும் அப்படித்தான் பட்டிருக்கிறார். போரடிக்காமலும் கொண்டு செல்கிறார். ஆனால் கடைசி இருபது நிமிட க்ளைமாக்ஸ் காட்சியை ரசிகன் எப்படி புரிந்துகொள்கிரான் என்பதில் தான் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.