நான் தான் ஷபானா – விமர்சனம்

நாட்டை காப்பதற்காக யூனிபார்ம் அணிந்த காவல் வீரர்கள் ஒருபக்கம் தங்களது கடமையை ஆற்றிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் நாட்டை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை இனம் கண்டு, அவர்களை உருத்தெரியாமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் யூனிபார்ம் போடாத சீக்ரெட் ஏஜென்ட்டுகள் பற்றிய படம் தான் ‘நான் தான் ஷபானா’..

தனது தாயுடன் மும்பையில் வசிக்கும் டாப்சி இயல்பிலேயே தைரியமான பெண்.. கூடவே தற்காப்பு கழிகளும் கற்றவர். தன்னை விரட்டி விரட்டி காதலிக்கும் கல்லூரி நண்பனின் காதலை முதலில் ஏற்க மறுத்து பின் அதை அவனது பிறந்தநாள் பரிசாக ஒப்புக்கொள்கிறார்.. ஆனால் அன்றிரவே காதலன் எதிராபாராமல் தன கண்முன்னால் ஒரு வெறிபிடித்த வாலிபர் கும்பலால் கொல்லப்படுவதை கண்டு அதிர்ச்சியாகிறார்.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து டாப்சி போலீசில் புகார் அளிக்க, மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க போலீசார் மறுக்கின்றனர். இந்த சமயத்தில் டாப்சிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. டாப்சியை உளவு பார்த்த இந்தியாவின் ரகசிய ஏஜென்சியில் இருந்து மனோஜ் பாஜ்பாய், டாப்சியிடம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அவர், டாப்சியின் காதலரை கொன்றவர்களை பழிவாங்க உதவுவதாக கூறுகிறார். அவ்வாறு உதவ வேண்டுமானால் அவர்கள் கொடுக்கும் வேலையை டாப்சி செய்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் கூறுகிறார்.
இதற்கு ஒப்புக்கொள்ளும் டாப்சி, அவளது காதலரை கொன்றவர்களை பழிவாங்குகிறார். அந்த விஷயத்தில் டாப்சிக்கு இன்னொரு சீக்ரெட் ஏஜென்ட் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் உதவி செய்கின்றனர். இந்த வேலை முடிந்ததும் மலேசியாவில் மறைந்து வாழும் உலகம் முழுக்க தேடப்படும் தீவிரவாதி டேனியை (பிருத்விராஜ்) கொல்லும் பொறுப்பு வரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு அதற்கான கடினமான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண டாப்சியால் என்ன செய்ய முடிந்தது என்பதுதான் மீதிக்கதை.

குருவி தலையில் பனங்காய் என்பதுபோல, கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் டாப்சி அதற்காக கடினமாக உழைத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள அக்சய் குமாரின் வருகைக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. ஆனாலும் படத்தில் அவருக்கு பெரிய அளவில் வேலையில்லை.

பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். முன்னணி கதாநாயகனாக இருக்கும் இவர் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதே மிகப்பெரிய துணிச்சல் தான். ஆனால் மிரட்டலான வில்லத்தனத்தையும் தன்னால் வெளிப்படுத்த முடியும் என நிரூபித்திருக்கிறார். மனோஜ் பாஜ்பாய்யை பொறுத்தவரை போனிலேயே பேசி உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் மட்டுமே செய்துகொண்டிருந்தாலும் ஒரு தலைமை அதிகாரியாக, ஒரு கெத்தான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

வடிவேலு-சிங்கமுத்து நடித்த மூட்டைப்பூச்சி மிஷின் காமெடி ஞாபகம் இருக்கு தானே.. இவ்வளவு சீரியசான ஆக்சன் படமான இந்தப்படத்தின் ஒன்லைன் அந்த காமெடி காட்சியை தழுவியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி.. ஒரு இன்டர்நேஷனல் கிரிமினலை, பல வருடங்களாக போலீஸ் கண்களில் மண்ணை தூவி, தலைமறைவாக இருக்கும் கொடிய அரக்கனை மலேசியாவில் மருத்துவமனையில் வைத்து கதையை முடிக்க டாப்சிக்கு ஸ்கெட்ச் போட்டு தருவதும் அதை டாப்சி செயல்படுத்துவதும் இருக்கட்டும்.. ஏன் அதை அக்சய் குமாரே செய்திருக்க முடியாதா..? அவர்தானே இந்த விஷயத்தில் டாப்சிக்கு மருத்துவமனை வரை வந்து உதவுகிறார்..

மிகப்பெரிய இன்டர்நேஷனல் டான் ஒருவனை அதிரடியாக மடக்கிப்பிடிக்கும் சீக்ரெட் ஏஜென்ட்டுகள், அவரை கட்டிவைத்து விசாரிப்பதெல்லாம் ஒகே.. ஆனால் அவன் யூரின் போகிறேன் என கேட்டதும் கைக்கட்டை அவிழ்த்து, அவ்வளவு சாதாரணமாக பாத்ரூமுக்குள் அனுப்பி வைக்கும் அளவுக்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்..?

கடைசி நேரத்தில் டாப்சிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என மலேசிய போலீசுக்கு போன் பண்ணும் அக்சய் குமார், பிருத்விராஜ் மருத்துவமனையில் அட்மிட்டாகும் போதே பண்ணியிருந்தால் அவர்களே அந்த காரியத்தை பண்ணியிருப்பார்களே.. இப்படி நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கவே செய்கின்றன..

இருந்தாலும் ஷபானாவின் (டாப்சி) வீரத்துக்காகவும் பிருத்விராஜின் வில்லத்தனத்துக்காகவும் இந்தப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.

NaanthaanshabanaNaanthaanshabana Movie Reviewஅக்சய் குமார்டாப்சிபிருத்விராஜ்ஷபானா