மீகாமன் – விமர்சனம்

 

 

யாராலும் நெருங்கவே முடியாத மிகப்பெரிய போதைப்பொருள் மாபியாவை கண்டுபிடித்து, அதை கூண்டோடு அழிக்கும் ஒரு போக்கிரி போலீஸின் கதை தான் ‘மீகாமன்’.

கோவாவில் மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் மன்னன் அஷுதோஷ் ராணா. ஆனால் போலீஸ் ரெக்கார்டில் ஒரு ஸ்டாம்ப் சைஸ் படம் கூட இல்லாத இவனை பிடிக்க, காவல்துறை உயர் அதிகாரிகளான அனுபமா குமார் மற்றும் ஓ.ஏ.கே.சுந்தர் ஆலோசனையின்படி மும்பையில் இருந்து வருகிறார் ஐ.பி.எஸ் சீக்ரெட் ஆபீசரான ஆர்யா..

கோவாவில் ராணாவுக்கு வேண்டிய பிதாமகன் மகாதேவன் தலைமையிலான போதைபொருள் கடத்தல் கும்பலில் ஒரு ஆளாக சேர்கிறார் ஆர்யா. இதேபோல மும்பையில் உள்ள ஆசிஷ் வித்யார்த்தி குரூப்புடன் சேர்கிறார் இன்னொரு அதிகாரியும் ஆர்யாவின் நண்பருமான ரமணா.

1௦௦௦ கிலோ போதை மருந்தை இரு கும்பல்களும் கைமாற்ற திட்டமிடுகின்றன. அந்த நேரத்தில் அவற்றை கையும் களவுமாக பிடித்து கடத்தல் மன்னன் ராணாவை சிறைபிடிக்கவேண்டும் என்பது ஆர்யாவின் திட்டம். அதற்கேற்ற ஏற்பாடுகளை ஆர்யா ஒருபக்கம் செய்துகொண்டிருக்க அவருக்கு உதவ வேண்டிய உயர் அதிகாரிகள் அனுபமா குமாரின் மீதான ஈகோவினால் கைவிரித்துவிடுகின்றனர்.

இதனால் போலீஸில் உள்ள சில கருப்பு ஆடுகளால், விஷயம் கசிந்து எதிரிகளிடம் மாட்டிக்கொள்கிறார் ரமணா. எதிரிகளின் சித்தரவதை தாளாமல் இன்னொரு கும்பலில் இருக்கும் ஆர்யாவின் பெயரை சொல்லிவிட்டு இறக்கிறார். இந்த உண்மை தெரியாத ஆர்யாவை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார் பிதாமகன் மகாதேவன். இதிலிருந்து ஆர்யா தப்பித்தாரா, ராணாவை வீழ்த்தினாரா..? என்பதுதான் பரபரப்பான இரண்டாம் பகுதியும் க்ளைமாக்ஸும்.

ஆர்யா.. வாவ் சூப்பர்யா..! படம் ஆரம்பம் முதல் இறுதிவரை படம் பார்க்கும் ரசிகனை அங்கே இங்கே என நகரவிடாமல் தனது பர்பாமன்ஸால் அசரடிக்கிறார். எதிரிகளின் கோட்டைக்குள் இருந்துகொண்டு அவர்களை சாய்க்க, ஆர்யா சாதுர்யமாக காய் நகர்த்துவதெல்லாம் விஸ்வநாதன் ஆனந்திற்கே புரிபடாத புதுவிதமான சதுரங்க வேட்டை.. லவ், ரொமான்ஸ், காமெடி இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஆக்சனில் ஆடி தீர்க்கிறார் ஆர்யா.. இது ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

இரண்டு சீனில் ஆர்யாவை தூரத்தில் இருந்தபடியே பார்த்து, இரண்டு சீனில் அவருடன் சண்டைபோட்டு, இரண்டு சீனில் அவரை காதலித்து என மொத்தம் ஆறு சீன்கள் அளவுக்கே தலைகாட்டும் கதாநாயகியாக ஹன்ஷிகா.. தனது தோழியிடம் ஹன்ஷிகா புலம்பும் இடங்கள் காமெடி..(படத்திலும் காமெடிக்கு ஹன்ஷிகா மட்டும் தான் பொறுப்பு)

ரோட்டோர கடைகளில் அமர்ந்து டீ குடிக்கும் பிரபல கடத்தல் மாபியா தலைவனாக அஷுதோஷ் ராணா. பரபர சேசிங், ஹீரோவுடன் பாக்ஸிங், அனாவசிய பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல், காட்டுக்கத்தல் கத்தாமல், அழுத்தமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

ஆசிஷ் வித்யார்த்தியும் பிதாமகன் மகாதேவனும் துணை வில்லன்களாக மிகையில்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது இந்த கேங்கஸ்டர் கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது. இன்னொரு வில்லனான ஹரீஷ் உத்தமனின் கொடூரத்தனமும் இதற்கு துணை நிற்கிறது.

உயர் அதிகாரிகளாக வரும் அனுபமா குமார் மற்றும் ஓ.ஏ.கே.சுந்தர் இவர்களில் அனுபமாவின் நடிப்பும், துடிப்பும் ஏ கிளாஸ்… ரமணாவுக்கு இதில் பேர் சொல்லும்படியான கேரக்டர்.. நிறைவான நடிப்பு… இதுபோல செலக்டிவான ரோல்களில் நடிங்க பாஸ்..

படத்தில் கிட்டத்தட்ட இரண்டு பாடல்கள் தான் என்பதால் அதில் அவ்வளவாக மெனக்கெடாத இசையமைப்பாளர் தமன், படம் முழுவதும் பின்னணி இசையில்  பிரமாதப்படுத்தி இருக்கிறார்… போதை மருந்து கடத்தல் கும்பல்களின் இருப்பிடங்களிலேயே உலாவுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் சதீஷ்குமாரின் கேமரா, கோவா என்றாலே பீஸ், ஹோட்டல், வெளிநாட்டவர் என்றில்லாமல் கோவாவின் இன்னொரு இருண்ட பக்கத்தையும் காட்டியிருக்கிறது.

லவ், காமெடி, பாடல் என எதையுமே வலிந்து திணிக்காமல், எடுத்துக்கொண்ட கதைக்கு நூறு சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கும் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்கலாம். படம் சீரியசான ஆக்ஷன் த்ரில்லர் தான். அதை தரவேண்டிய விதத்தில் தந்தால் ஒவ்வொரு நொடியையும் ரசிகன் அனுபவித்து ரசிப்பான் என்பதை மீண்டும் ஒருமுறை ‘பளிச்’சென உணர்த்தியிருக்கிறார்.

ஆக்ஷன் படங்களை எடுப்பவர்கள் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உண்டு இந்தப்படத்தில்.. தடையற தக்க படம் மூலம் தன் மீது ஒரு தனி கவனத்தை ஏற்படுத்திய இயக்குனர் மகிழ் திருமேனி, இந்தப்படத்தில் அந்த மரியாதையை இரட்டிப்பாக்கி இருக்கிறார்.

இந்த வருடத்தின் இறுதியில் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்திருப்பது ஆர்யாவுக்கும், மகிழ்திருமேனிக்கும் மட்டும் அல்ல.. படம் பார்க்கும் ரசிகனுக்கும் தான்.. தியேட்டரில் கிடைக்கும் இரண்டே கால் மணிநேர த்ரில் அனுபவத்தை தயவுசெய்து தவறவிட்டுவிடாதீர்கள்.

அனுபமா குமார்அஷுதோஷ் ராணாஆசிஷ் வித்யார்த்திஆர்யாஓ.ஏ.கே.சுந்தர்கோவாசதீஷ்குமார்தடையற தக்கதமன்பிதாமகன் மகாதேவன்மகிழ் திருமேனிமீகாமன்ரமணாஹன்ஷிகாஹரீஷ் உத்தமன்