‘லியோ’ விமர்சனம்

நடிகர்கள் : விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி, ஜார்ஜ் மரியன், மடோனா செபஸ்டியன்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : மனோஹ் பரம்ஹம்சா
இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு : எஸ்.எஸ்.லலித் குமார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் ‘லியோ’ திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? அல்ல ஏமாற்றம் அளித்ததா?, விமர்சனத்தை பார்ப்போம்.

மனைவி திரிஷா மற்றும் பிளைகளுடன் இமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார் விஜய். பார்த்திபனான அவர் அங்கு உணவகம் ஒன்றை நடத்தி வர, அந்த உணவகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தால் விஜய் பிரபலமடைகிறார். அவரது புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாக, அதை பார்த்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரும் விஜயை சந்தித்து, “நீ லியோ தானே” என்ற் கேட்கிறார்கள். தான் லியோ அல்ல பார்த்திபன், என்று விஜய் சொல்ல அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், நீ லியோ என்பதை ஒப்புக்கொள்ளும் வரை உன்னை விடப்போவதில்லை என்று சொல்கிறார்கள். யார் அந்த லியோ?, பார்த்திபனான விஜய்க்கும், லியோவுக்கும் என்ன தொடர்பு?, போதைப்பொருள் கும்பலுக்கும் அவருக்குமான தொடர்பு என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய், குடும்பம், தங்கை, நடனம், ஆக்‌ஷன் என அனைத்து விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார்.

விஜய்க்கு மனைவியாக நடித்திருக்கும் திரிஷா அழகாக இருக்கிறார். ஆனால், கதையில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றாலும், விஜய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வைத்து இருவரையும் நிஜ, கணவன் – மனைவியாகவே வாழ வைத்திருக்கிறார்கள்.

வில்லன்களாக நடித்திருக்கும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரது எண்ட்ரியும் அமர்க்களமாக இருந்தாலும் ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு அவர்களுடைய வேடம் வேலைக்கு ஆகாமல் போகிறது. இருந்தாலும் இருவரும் வரும் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநர் மிஸ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, ஜார்ஜ் மரியான், மடோனா செபஸ்டியன் என்று படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கு விருந்த் படைத்திருக்கிறார்கள்.

சாதாரண இடங்களை கூட அழகாக காட்சிப்படுத்தக் கூடிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹம்சா, பனி படர்ந்த இமாச்சல பிரதேசத்தை மிக சாதாரணமாக காட்சிப்படுத்தியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சண்டைக்காட்சிகள் மற்றும் இரவு நேரக் காட்சிகள் மட்டும் சற்று கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

அனிருத்தின் அக்மார்க் இல்லாத இசை ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறது. ஒரே ஒரு பாடல், அந்த பாடலும் மாஸ்டர் பட பாணியில் படமாக்கப்பட்டிருப்பதோடு, பின்னணி இசையும் படு மோசமாக அமைந்திருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது வழக்கமான பாணியில் படத்தை இயக்கியிருந்தாலும், தனது முந்தைய படங்களில் நிகழ்த்திய மேஜிக்கை இந்த படத்தில் நிகழ்த்தவில்லை என்றாலும் விஜயிடம் மக்கள் விரும்பும் அனைத்து விசயங்களையும் படத்தில் வைத்து, அதற்கு ஏற்ற வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘லியோ’ விஜய் ரசிகர்களுக்கான விருந்து

ரேட்டிங் 3/5

kollywood movie leo reviewleo movie reviewlogesh kanagarajtamil film leo reviewtamil movie leo reviewTrishavijay in leo review