’கும்பாரி’ விமர்சனம்

நடிகர்கள் : விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான் விஜய், மதுமிதா, பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி, காதல் சுகுமார்
இசை : ஜெயபிரகாஷ், ஜெய்தீன், பிரித்வி
ஒளிப்பதிவு : பிரசாத் ஆறுமுகம்
இயக்கம் : கெவின் ஜோசப்
தயாரிப்பு : குமாரதாஸ்

அறிமுக இயக்குநர் கெவின் ஜோசப் இயக்கத்தில், குமாரதாஸ் தயாரிப்பில், விஜய் விஷ்வா, நலீப் ஜியா, மஹானா சஞ்சீவி ஆகியோரது நடிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள ‘கும்பாரி’ திரைப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

தாய், தந்தை இல்லாத விஜய் விஷ்வா மற்றும் நலீப் ஜியா, ஒருவருக்கொருவர் ஆதரவாக சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விஜய் விஷ்வாவும், மஹானாவும் காதலிக்க, இருவரும் பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் நலீப் ஜியா ஈடுபடுகிறார். ஆனால், மஹானாவுக்கு 21 வயது பூர்த்தியடைய இன்னும் 7 நாட்கள் இருப்பதால், தற்போது அவருக்கு பதிவு திருமணம் செய்து வைக்க முடியாமல் போகிறது. இதற்கிடையே, மஹானாவின் அண்ணன் ஜான் விஜய், தங்கையின் காதல் மற்றும் திருமணம் பற்றி தெரிந்துக்கொண்டு அவர்களை பிரிக்க முயற்சிக்கிறார். அப்போது நண்பனுக்கு ஆதரவாக நிற்பதோடு, ஜான் விஜயை எதிர்க்கும் நலீப் ஜியா, மஹானாவுக்கு 21 வயது பூர்த்தியடைந்தவுடன், அவருக்கும், தனது நண்பன் விஜய் விஷ்வாவுக்கும் திருமணம் செய்து வைப்பேன், இதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது, என்று சவால் விடுகிறார்.

அதன்படி, நண்பனின் திருமணத்தை கோலாகலமாக நடத்தும் பணிகளை நலீப் ஜியா கவனிக்க, மறுபக்கம் தனது தங்கையை விஜய் விஷ்வாவிடம் இருந்து பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜான் விஜய் ஈடுபடுகிறார். இந்த நிலையில், திருமணத்திற்கான பண தேவைக்காக, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நலீப் ஜியா, காணாமல் போகிறார். நண்பனின் நிலை அறிந்து தவிக்கும் விஜய் விஷ்வா, தனது நண்பனை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது?, காணாமல் போன நலீப் ஜியா என்ன ஆனார்?, விஜய் விஷ்வா – மஹானா திருமணம் நடந்ததா? இல்லையா?, என்பதை காதல் மற்றும் நட்புடன் நகைச்சுவையையும் சேர்த்து சொல்வது தான் ‘கும்பாரி’.

நட்பை கருவாக கொண்டு உருவாகியிருக்கும் படத்தின் தலைப்பான கும்பாரிக்கு அர்த்தம் நண்பனாம். அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நண்பர்களை கும்பாரி என்று அழைப்பார்களாம்.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா, காதல், காமெடி என இரண்டிலும் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். குறிப்பாக காதலியுடன் நெருக்கமாக நடிப்பதில் படத்துக்கு படம் முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் நலீப் ஜியாவுக்கு வேலை குறைவு தான் என்றாலும், கூடுதலான காட்சிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம், என்று நினைக்கும் அளவுக்கு தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மஹானா சஞ்சீவியின் நடிப்பில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், பட்ஜெட் படங்களுக்கு ஏற்ற நாயகியாக இருக்கிறார்.

நாயகியின் அண்ணனாக நடித்திருக்கும் ஜான் விஜய், கன்னியாகுமரி தமிழில் வில்லனாக அளவாக மிரட்டினாலும், காமெடியில் கலக்கியிருக்கிறார்.

பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், காதல் சுகுமார், செந்தி குமாரி, ஜாங்கிரி மதுமிதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், ஜெய்தீன், பிரித்வி ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு. கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் பாடல் கவனம் ஈர்க்கிறது.

பிரசாத் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகை கண்களுக்கு விருந்து படைத்திருப்பதோடு, சில கேரள பகுதிகளைக் காட்டி கவனம் ஈர்த்திருக்கிறது.

நட்பை மையக்கருவாக கொண்டாலும், காதலுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் கெவின் ஜோசப், எளிமையான கதைக்கு மிக எளிமையான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

காணாமல் போன நலீப் ஜியா என்ன ஆனார்? என்ற கேள்வி படத்தை எதிர்பார்ப்புடன் பயணிக்க வைத்தாலும், அதை தவிர மற்ற அனைத்தும் மந்தமாகவே நகர்கிறது. அதிலும், காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகள் ரசிகர்களை மிகவும் சோதிக்கிறது.

நண்பனின் காதலுக்கு உதவ நினைத்த நண்பன் காணாமல் போக, அவனை தேடும் மற்றொரு நண்பனின் வலியையும், தேடலையும் திரைக்கதையாக்கியிருந்தால் படம் சற்று புதிதாக இருந்திருக்கும். ஆனால், இயக்குநர் காணாமல் போன நண்பனை பற்றிய பிளாஷ் பேக்கில் காதலுக்கும், அதை காமெடியாக சொல்வதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது, எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில், சில குறைகளோடு இருந்தாலும் ‘கும்பாரி’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

ரேட்டிங் 2/5

actor nalip ziadirector kevin josephJohn Vijaykollywood movie kumbari reviewkumbari movie reviewkumbari reviewMadhumithamahana sanjeeviSaravanantamil movie kumbari reviewvijay vishwa