கிருமி – விமர்சனம்

திருமணம் முடிந்து வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றும் கதிருக்கு, தன்னைப்போலவே போலீஸ் இன்பார்மர் வேலை வாங்கித்தருகிறார் சார்லி. இன்ஸ்பெக்டருக்கு சின்னச்சின்ன தகவல் கொடுத்து, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை பெறும் கதிருக்கு தானே போலீஸ் ஆகிவிட்டதாக நினைப்பு.

இந்த மிதப்பில் சார்லியின் அறிவுரையை மீறி பக்கத்து ஏரியா லிமிட்டில் மூக்கை நுழைத்து, பெரிய டீல் ஒன்றை இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிடுகிறார்.. ஆனால் விஷயம் பெரிய இடத்திற்கு போக, போலீஸும் எதிரியும் ஒன்றாகிறார்கள். இதில் அப்பாவியான சார்லி பலி ஆகிறார். தப்பி ஓடும் கதிர், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடுகிறார்.. அவரால் தப்ப முடிந்ததா..? இல்லை அவரும் பலிகடா ஆனாரா என்பது க்ளைமாக்ஸ்.

போலீசுக்கு இருக்கும் அதிகாரம், மரியாதை எல்லாம் போலீசாக ஆக்டிங் பண்ணுபவர்களுக்கு ஒருபோதும் இல்லை… கிடைக்கவும் கிடைக்காது.. என்றைக்கு இருந்தாலும் அவர்கள் காவல்துறையின் பலி ஆடுகள் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கும் படம் தான் ‘கிருமி’.

போலீஸ் இன்பார்மராக வரும் கதிர், பல காட்சிகளில் கண்களாலேயே நடித்திருக்கிறார். ஏதோ போலீஸாக மாறிவிட்டதாகவே அவர் போடும் ஆட்டமாகட்டும், பின்னால் அதே போலீசே தன்னை வேட்டையாட முற்படுவது கண்டு நிலைகுலைவதாகட்டும் முந்தைய படத்தைவிட இதில் நடிப்பில் நன்றாக தேறியிருக்கிறார்.

ரேஷ்மி மேனனின் மேக்கப்பைத்தான் டல்லாக்கி இருக்கிறார்களே தவிர, அவரது பெர்பார்மன்ஸ் பிரைட்டாகத்தான் இருக்கிறது. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க முன்வந்த அவரது தைரியத்திற்கு ஒரு சபாஷ். சமீபகாலமாக தனது செகன்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் சார்லி, இதிலும் தனது பண்பட்ட நடிப்பால் பரிதாபம் அள்ளுகிறார். இன்ஸ்பெக்டர்களாக வரும் மாரிமுத்து, டேவிட் இருவரின் குள்ளநரித்தனம் பிரமிக்க வைக்கிறது..

போலீஸ் இன்பார்மர்களின் அவலநிலையை, போலீஸ் நண்பர்களாக பணிபுரிபவர்களின் லிமிட்டை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள் கதாசிரியர் மணிகண்டனும் இயக்குனர் அனுசரணும்.. அந்த விறுவிறுப்பை படம் முழுதும் தக்கவைக்கிறது. ‘கே’வின் இசையும் அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும். ஆனால் யதார்த்தம் என்கிற பெயரில் வைக்கப்பட்டிருக்கும் அந்த க்ளைமாக்ஸைத்தான் மனது ஏற்க மறுக்கிறது.

கதிர்கிருமிகேசார்லிரேஷ்மி மேனன்