இன்று தென் மாவட்ட விவசாயிகளை பயம் காட்டிக்கொண்டு இருக்கும் மீத்தேன் திட்டத்தையும் அதனால் ஏற்பட இருக்கும் அபாயத்தையும், அதை தடுத்து குரல்கொடுக்க அந்த மண்ணின் விவசாயி ஒருவர் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லும் படம் தான் இந்த கத்துக்குட்டி.
படித்துவிட்டு வெளியூருக்கு வேலைக்கு செல்லாமல் தனது தஞ்சை மாவட்ட கிராமத்திலேயே விவசாயத்திற்காக பாடுபடும் நரேன், மீத்தேன் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வு அழிந்துவிட கூடாது என போராடும் யதார்த்தமான கிராமத்து போராளியாக நடித்திருக்கிறார். மீத்தேன் திட்டத்திற்காக ஊருக்குள் ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளை அடித்து விரட்டுவதும், விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்க வரும் தேவிப்ரியாவை பயங்காட்டி துரத்துவதும் சூரியுடன் சேர்ந்து கிராமத்து கலாட்டாக்கள் பண்ணுவதும் தேர்தலில் சீட் கிடைத்ததும் அதில் ஜெயிக்க முனைப்பு காட்டுவதுமாக சீரியஸ், காமெடி, கோபம் என நடிப்பில் பல முகங்களை காட்டும் நரேனுக்கு இது முக்கியமான ஒரு படம்.
செல்போன் டவர்களால் பறவை இனங்கள் அழிந்து வருகின்றன என்பதற்காகவே தன்னுடைய இடத்தில் மட்டுமல்லாமல் ஊருக்குள்ளேயே அவற்றை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் நாயகி சிருஷ்டி டாங்கேயின் நடிப்பு யதார்த்தமான கிராமத்து வெகுளிப்பெண் கதாபாத்திரத்தையே பிரதிபலிக்கிறது. நரேனுடன் சேர்ந்துகொண்டு உதார்விடும் காட்சிகளில் சூரி செம அலப்பறை காட்டுகிறார். போலீசிடம் பந்தா பண்ணிவிட்டு, பின் அவர்களிடமே வாங்கி கட்டும் காட்சி வயிறை பதம் பார்க்கிறது..
மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் உயிரை பலிகொடுக்கும் இயக்குனர் ராஜா, பதவிக்காக கட்சிதமாக காய் நகர்த்தி காரியங்களை சாதித்தாலும், விவசாயம் அழியக்கூடாது என்பதற்காக தனது ஆளையே தோற்கடிக்கும் அரசியல்வாதியாக ஞானவேல், நாற்பது வருடங்களாக அரசியலில் இருந்தும் எம்.எல்.ஏ ஆகமுடியாமல் மறுகுவதும் தனக்கு தரவேண்டிய சீட்டை மகனுக்கு கொடுத்துவிட்டார்களே என புலம்புவதுமாக நரேனின் அப்பாவாக வரும் ஜெயராஜ் என மற்ற துணை கதாபாத்திரங்களும் கதையை தாங்கி பிடித்திருக்கின்றன.
விவசாயி ஒருவர் பட்டினிசாவால் இறக்கிறார் என்றால், அது தனக்கு சாப்பாடு இல்லை என்பதற்காக இல்லை, மற்றவர்களுக்கு தன்னால் சாப்பாடு போட முடியவில்லையே என்கிற வருத்தத்தில் தான் என பொட்டில் அடித்தவாறு விவசாயிகளின் பெருமையை பேசியிருக்கிறார் இயக்குனர் ரா.சரவணன். அதோடு மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பதன் அவசியத்தையும் அதன் ஆபத்தையும் படம் பார்ப்பவர்கள் மனத்தில் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.
பெயர்தான் ‘கத்துக்குட்டி’யே தவிர சொல்ல வந்த கருத்தை சரியாக சொன்ன விதத்தில் இந்தப்படம் ‘கருத்தான குட்டி’ என்றுதான் சொல்லவேண்டும்.