ஜூலியும் 4 பேரும் – விமர்சனம்

அதிர்ஷ்ட மீனை வைத்து ஒரு படம் வெளியாகி சில வாரங்கள் கூட ஆகவில்லை.. இதோ இப்போது அதிர்ஷ்ட நாயை மையமாக வைத்து ‘ஜூலியும் 4 பேரும்’ என்கிற படம் வெளியாகியுள்ளது..

காதில் மூன்று ஸ்டார்கள் குறியீடு இருந்தால் அது அதிர்ஷ்ட நாயாம்.. அப்படிப்பட்ட நாய் ஜூலியை சென்னையில் இருக்கும் கோடீஸ்வரர் ஒருவருக்காக வெளிநாட்டில் இருந்து கடத்திக்கொண்டு வந்து தருகிறது நாய் கடத்தல் கும்பல்.. கோடீஸ்வரரின் மகள் மனிஷாவுக்கு அந்த நாய் என்றால் உயிர். அந்த நாய் வந்தவுடன் கோடீஸ்வரருக்கு கைநழுவி போகவிருந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறது..

இந்த நிலையில் சென்னைக்கு வேலை தேடி வரும் முத்து, டேவிட், பாண்டி ஆகியோர் ஒரு சீட்டிங் ஆசாமியிடம் வேலைக்காக சில லட்சங்களை கொடுத்து ஏமாறுகின்றனர்.. அவர்களை தேற்றி அடைக்கலம் தருகிறார் ஆட்டோ ட்ரைவர் மாணிக்கம்.. எதிர்பாராத விதமாக இவர்களுக்கு கோடீஸ்வரர் மகள் மனிஷாவுக்கும் நட்பு ஏற்படுகிறது..

ஒரு கட்டத்தில் தங்களும் பணக்காரர்களாக விரும்பும் இந்த நால்வரும், ஜூலியை கடத்தி பணம் கேட்க திட்டமிடுகின்றனர்.. ஆனால் இவர்கள் கைக்குள் வந்த ஜூலி தப்பித்து போய், அந்த நாயை இன்னொரு நபருக்கு கைமாற்றி பணம் பார்க்க நினைக்கும் அதே கடத்தல் கும்பலிடம் சென்று சேர்கிறது..

ஜூலியை தேடி கண்டுபிடித்து தருமாறு, நாயை கடத்தியது தெரியாமல் இந்த நண்பர்களிடமே உதவி கேட்கிறாள் மனிஷா. இன்னொரு பக்கம் ஜூலி என்கிற பெண் தன் காதலனுடன் வீட்டிவிட்டு ஓடிவிட்டாள் என போலீஸ் அவளைத்தேட, நாய் ஜூலியை தேடும் அந்த நான்கு பேரும் போலீசிடம் மாட்ட.. ஜூலி நாய் என்ன ஆனது, ஜூலி பெண் என்ன ஆனார்.? இந்த நாலு நண்பர்களின் கதி என்ன ஆனது என்பதெல்லாம் மீதி கலாட்டா கதை..

கதாநாயகர்கள் என நான்கு பேர் நடித்திருந்தாலும் முத்துவாக வரும் (விஜய் டிவி) அமுதவாணன் நமக்கு தெரிந்தமுகம் என்கிற வகையில் முதல் ஹீரோ ஆகிறார்.. ஆனால் அவரை மட்டுமே முழுப்படத்திற்கான ஹீரோ என்றெல்லாம் ஏற்கமுடியவில்லை.. நல்லவேளை காதல் காட்சி, டூயட் எல்லாம் இல்லை..

மற்ற மூன்று நண்பர்களில் ஆட்டோ ஓட்டும் மாணிக்கமாக ஜார்ஜ் விஜய் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். கொஞ்சம் கவனிக்க வைக்கும் அழகுடன் மனிஷாவாக வரும் நாயகி ஆல்யா மானஸாவுக்கு நடிப்பதற்கான பெரிய வேலையில்லை.. நண்பர்கள் நாலு பேரும் போலீஸ்காரர் மகாநதி சங்கரிடம் சிக்கி படும் பாடு கொஞ்ச நேரம் சிரிப்பு.. கொஞ்ச நேரம் கடுப்பு..நண்பர்கள் நாய் விஷயத்தில் பெரும்பாலான நேரங்களில் முட்டாள்களாகவே நடந்துகொள்வது எரிச்சலூட்டுகிறது.. நாயையும் பணத்தையும் அவ்வளவு அஜாக்கிரதையாகவா பார்த்துக்கொள்வார்கள்..?

இருந்தாலும் அமச்சூர்த்தனமான சில விஷயங்களை தாண்டி சில ஆள் மாரட்ட காமெடிகள் நம்மை சிரிக்க வைப்பதுதான் படத்திற்கு பலம்.. அதிர்ஷ்ட நாய், வேலையில்லாத பணத்தை தொலைத்த இளைஞர்கள் என்கிற லைனை வைத்து இன்னும் எவ்வளவோ பண்ணியிருக்கலாம் தான்..

Julium 4 Perum Tamil Movie Reviewஜூலியும் 4 பேரும்டேவிட்பாண்டிமனிஷாமுத்து