’ஜெயிலர்’ விமர்சனம்

நடிகர்கள் : ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், ஷிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயக், மிர்ணா மேனன், யோகி பாபு, தமன்னா, வசந்த் ரவி, நாக பாபு, கிஷோர்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
இயக்கம் : நெல்சன்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்

ஓய்வு பெற்ற சிறை அதிகாரியான ரஜினிகாந்தின் மகன் வசந்த் ரவி. நேர்மையான போலீஸ் அதிகாரியான வசந்த் ரவி, சிலை கடத்தல் நெட்வொர்க்கை பிடிப்பதில் தீவிடம் காட்டுவதால், அவரை கடத்தி கொன்று விடுகிறார்கள். மகனின் கொலை பழி தீர்க்க ரஜினிகாந்த் ஒரு கொலை செய்கிறார். அதனால் கோபமடையும் வில்லன் ரஜினியின் குடும்பத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வில்லனை ஒட்டுமொத்தமாக அழிக்க ரஜினி களத்தில் இறங்க, அதன் பிறகு என்ன? நடந்தது என்பது தான் ‘ஜெயிலர்’ படத்தின் மீதிக்கதை.

பயந்த சுபாவம் கொண்டவரை போல் இருக்கும் ரஜினிகாந்த், மகன் கொலைக்குப் பிறகு எடுக்கும் அதிரடி அவதாரம் திரையரங்கையே அதிர வைக்கிறது. தாத்தாவாக நடித்தாலும் தனது வசீகரமான நடிப்பு மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ரஜினிகாந்த், இன்றைய தலைமுறைகளை கூட ரசிகர்களாக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிறுவன் சித்விக் என அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. அதிலும் ரஜினிகாந்திடம் அவர் சொல்லும் பாரதியார் பாடல்கள் வயிர் வலிக்க சிரிக்க வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் விநாயக், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் மிரட்டுகிறார்.

சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், நாக பாபு என முன்னணி நடிகர்கள் பலர் கெளரவ வேடத்தில் வந்து போகிறார்கள்.

“காவாலா…” பாடல் மட்டும் இன்றி சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கும் தமன்னாவும் படத்திற்கு அனில் போல் உதவியிருக்கிறார்.

விஜய் கார்த்திக் கண்ணனில் ஒளிப்பதிவு கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் இருக்கிறது.

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டாலும் படத்துடன் பார்க்கும் போது இன்னும் அதிகமாக ரசிக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் ஆர்.நிர்மல், முதல் பாதியை படு வேகமாக நகர்த்தினாலும், இரண்டாம் பாதியில் வெட்ட வேண்டிய பல காட்சிகள் மீது இரக்கம் காட்டியிருப்பது படத்திற்கு சற்று தொய்வை கொடுக்கிறது.

ஸ்டண்ட் சிவாவின் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களம். ரஜினிகாந்துக்கு அதிக வேலை கொடுக்கவில்லை என்றாலும், சண்டைக்காட்சிகளை அனல் பறக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.

வழக்கமான கதை தான் என்றாலும் அதை அனைத்துவிதமான ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இயக்குநர் நெல்சன் இயக்கியிருக்கிறார். ரஜினிகாந்தை எப்படி காட்டினால் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மிம நன்றாக புரிந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

முதல் பாதியை காமெடியோடு நகர்த்திவிட்டு, இரண்டாம் பாதியை அதிரடியாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் நெல்சன், இரண்டாம் பாதியில் சில காட்சிகளையும், காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருக்கலாம். அந்த ஒரு விஷயம் மட்டுமே படத்திற்கு சிறு குறையாக தெரிகிறது. மற்றபடி படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கிறது.

ரேட்டிங் 3.5/5

jailer movie reviewkollywood movie reviewRajinikanthRamya KrishnanSuper Startamil film jailer reviewtamil movie jailerVasanth Ravi