இறுதிச்சுற்று – விமர்சனம்


மீண்டும் ஒரு பாக்ஸிங் படமா என எந்தவகையிலும் அலட்சியப்படுத்த முடியாத, அற்புதமான படம் தான் இந்த ‘இறுதிச்சுற்று’.

யாரையும் சட்டை செய்யாத, பாக்ஸிங்கிற்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கோச் மாதவன். இவரை பழிவாங்குவதற்காக சென்னைக்கு தூக்கி அடிக்கிறார் டெல்லியில் உள்ள உயரதிகாரி.. அங்கிருந்தே ஒரு பாக்ஸிங் வீராங்கனையை உருவாக்குகிறேன் பார் என சவால்விட்டு சென்னைக்கு வரும் மாதவனின் கண்களில் பாக்ஸிங்கில் ஆர்வமுள்ள மீனவப்பெண்ணான ரித்திகா படுகிறார்..

துறுதுறுவென யாரையும் எடுத்தெறிந்து பேசும் குணமுள்ள ரித்திகா, பாக்ஸிங் பயிற்சிக்கு ஒத்துக்கொண்டாலும் மாதவனிடம் தெனாவெட்டாக நடக்கிறார். பின்னர் பாக்ஸிங்கில் அவரது அர்ப்பணிப்பு உணர்வை தெரிந்துகொண்டு அவர்மீது காதலாகி, தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும்போது சகோதரியின் சூழ்ச்சியால் தோல்வியடைகிறார்..

ரித்திகா தன்னை வேண்டுமென்றே பழி தீர்த்ததாக கருதும் மாதவன் கோபத்தில் ஊரை விட்டு கிளம்புகிறார்.. இதை தொடர்ந்து உள்ளூர் கோச்சான நாசர் மூலம் ரித்திகாவுக்கு வலை விரிக்கிறார் டெல்லி அதிகாரி. அதற்கு இணங்காத ரித்திகாவை சூழ்ச்சியால் ஜெயிலுக்கு அனுப்புகிறார்.. விஷயம் கேள்விப்பட்ட மாதவன் திரும்பி வந்து ரித்திகாவை தன்னுடன் அழைத்து சென்று பயிற்சி அளித்து, உலக லெவல் போட்டியில் பங்கேற்க அவரை தயார்படுத்துகிறார். ஆனால் கடைசி நேரத்தில் உயர் அதிகாரியால் எதிர்பாராத சிக்கல் உருவாகிறது. மாதவன் சமாளித்தாரா..? ரித்திகா சாதித்தாரா என்பது பரபர க்ளைமாக்ஸ்.

குதிரைக்கு கடிவாளம் போட்டமாதிரி எடுத்துக்கொண்ட கதைக்களத்தை விட்டு அங்கே, இங்கே என கவனம் சிதறாமல் எந்த வழக்கமான மசாலாவையும் சேர்க்காமல் ஒரு தரமான விளையாட்டு படத்தை நேர்மையாக தந்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சினிமாவிற்கு புதிதாக வரும் மற்றும் ஏற்கனவே வந்த பெண் இயக்குனர்கள் இவரிடம் படித்துக்கொள்ள பாடங்கள் ஏராளம் இருக்கின்றன.

இந்த கதையின் உயிர் மூச்சு என்றால் அது பாக்ஸிங் கோச்சான மாதவனும், பாக்ஸரான ரித்திகா சிங்கும் தான். மாதவன் இந்தப்படத்திற்காக ஏன் தன் நாட்களை நிறைய செலவழித்தார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்படுகிறது. அன்பு, ஆக்ரோஷம், கர்வம் என எல்லாம் கலந்த ஒரிஜினல் கோச்சாகவே மாறியுள்ளார். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் படம் பார்க்கும் ரசிகனுக்கு தனது உத்வேகத்தை அப்படியே கடத்தி விடுகிறார் மாதவன்.. திரைக்கதையின் பலமும் அதுதான்.

ஒரிஜினல் பாக்ஸரான ரித்திகா சிங்கிற்கு இதுதான் முதல் படம் என்றால் துளியும் நம்பமுடியவில்லை. காட்சிக்கு காட்சி அப்ளாஸ் அள்ளுகிறார். சேரிப்பகுதிகளில் வாயாடியாக சுற்றுவது, மாதவனை அடிக்கடி டீஸ் பண்ணுவது என ரகளை பண்ணும் ரித்திகா, பாக்ஸிங் காட்சிகளில் எழுந்து நின்று கைதட்ட வைக்கிறார். களிமாக்சில் அந்த அதிகாரிக்கு நாலு பஞ்ச் போடும்போதும், ஓடோடி வந்து தாவிப்போய் மாதவனை கட்டிப்பிடிக்கும்போதும் மனதை அள்ளுகிறார்.

படத்திற்கு உறுதுணையாக அளவெடுத்தாற்போல் செதுக்கப்பட்ட மற்ற கதாபாத்திரங்களில் சாந்தமும் தீர்க்கமுமான ராதாரவி, லொடலொட பேச்சில் நாசர், அலட்டல் இல்லாத வில்லன் அதிகாரியாக வரும் ஜாகீர் உசேன், ரித்திகாவின் அக்காவாக நடித்துள்ள மும்தாஜ் சர்கார், இருவரது தந்தையாக அவ்வப்போது காமெடி தூவும் காளிவெங்கட் என யாருமே நடிப்பில் உறுத்தலை தராமல், இயல்பாக வந்து போகிறார்கள்..

படத்தில் அருண் மதீஸ்வரன் எழுதியுள்ள வசனங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. மாதவன், ரித்விகாவிடம் அது வெளிப்படும் விதம் அருமை. சந்தோஷ் நாராயணன் இசையில் ‘வா மச்சானே’ பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அருமை. ‘ஏ சண்டக்காரா’ பாடலும் ஈர்க்கிறது. தனது ஒளிப்பதிவால் இரண்டு மணி நேரம் பாக்ஸிங் களத்திற்கே நம்மை அழைத்து செல்கிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்.

எந்த விளையாட்டிலும் அரசியல் உண்டு என்றாலும், பாக்ஸிங்கில் என்னவிதமான அரசியல் உலாவுகிறது, பெண்களை எவ்வாறு பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.. படத்திற்கு பாதகம் செய்யும் எந்த விஷயங்களையும் சேர்க்காமல் இலக்கை மட்டுமே குறிவைத்து படம் எடுத்துள்ள அவர் மீது தனி மரியாதையே ஏற்படுகிறது… விளையாட்டில் ஆர்வமுள்ள, விளையாட்டை ஊக்குவிக்கும் அனைவரும் ஒருமுறைக்கு இருமுறை பார்க்கவேண்டிய படம் இது.

ஹேட்ஸ் ஆப் ட்டூ ‘இறுதிச்சுற்று’ டீம்..!

IruthisuttruIruthisuttru ReviewMadhavanRithikhaSanthosh Narayananஇறுதிச்சுற்று விமர்சனம்