பீட்சா, ஜிகர்தண்டாவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள மூன்றாவது படம் தான் ‘இறைவி’..
ஆண்கள் எல்லோரும் தொட்டதற்கெல்லாம் கோபப்படுகிறோம்.. ஏதோ ஒரு இடத்தில் கோபம் எல்லைமீறி அதனால் சிலநேரம் நம்மையும் அறியாமல் விபரீதம் நிகழ்ந்து விடுகிறது.. நமக்கு நம் கோபம் தான் பெரிது.. ஆனால் அதனால் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படும் மனைவி, மகள், அம்மா, அக்கா, சித்தி என நம் வீட்டுப்பெண்களை பற்றி ஒரு நொடியாவது அந்த நேரத்தில் யோசிக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை.. இதைத்தான் பொட்டில் அடித்தாற்போல சொல்லவருகிறது ‘இறைவி’.
எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி என இருவரின் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் மூலம் வாழும் ‘இறைவி’களின் நிலையை பளிச்சென படம்பிடித்து காட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.. விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா என பீக்கில் இருக்கும் ஹீரோக்களை விட எஸ்.ஜே.சூர்யாவின் மீது கதையை நகர்த்தி இருப்பதன் மூலம், அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதன் மூலம் ஹீரோயிச கதைகளுக்கு இயக்குனர் செக் வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்..
என்ன ஒரு மிரட்டலான நடிப்பு எஸ்.ஜே.சூர்யாவிடம்..? அழுகை, ஆவேசம், கோபம் என இந்தப்படத்தில் இதுநாள் வரை பார்த்திராத புது மனிதராக தெரிகிறார்.. அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.. விஜய் சேதுபதியின் கேரக்டரும் அதை அவர் பிரதிபலித்திருக்கும் விதமும் அவ்வளவு இயல்பு.. இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழும் விபரீதங்களுக்கும் அவரது கோபம் காரணமாகி அதன்மூலம் அனைவரது வாழ்க்கையும் புரட்டிப்போடப்படும்போது பகீர் என்கிறது..
கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே பாபி சிம்ஹாவின் நடிப்பில் கொஞ்சம் தேஜஸ் கூடி விடுகிறது போலும்.. அவ்வளவு நல்ல மனம் கொண்ட சிம்ஹாவின் மனதில் விஷ விதையை விதைத்திருக்க வேண்டுமா சுப்புராஜ்..? அஞ்சலி, கமாலினி முகர்ஜி என இருவருமே வாழ்க்கையின் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு படிமங்களாக வாழும் இன்றைய ‘மனிதி’களையும் ‘இறைவி’களை கண்முன் நிறுத்துகிறார்கள்.
படம் முழுதும் அதிர்ந்து பேசாத, ஆர்ப்பாட்டமில்லாத அதே சமயம் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார் ராதாரவி. சித்தப்பாவாக வரும் சீனு மோகன் நெகிழவைக்கிறார். சில காட்சிகளில் வந்து (மட்டுமே) போகிறார் கருணாகரன்..
பாடல்களால் நம்மை கவரும் வேலையே விட, காட்சிகளுக்கு தேவையான பின்னணி இசையால் கனம் சேர்த்து நம் கவனம் ஈரத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். எங்கேயும் துறுத்தாத, கண்களை உறுத்தாத சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு ஒருவித பதைபதைப்புடன் நம்மை படத்துடன் இணைந்து பயணிக்க வைக்கிறது.
இடைவேளை வரை தொய்வில்லாமல் தெளிந்த நீரோடை போல செல்லும் கதையில், இடைவேளைக்குப்பின் பாபிசிம்ஹா விஷயத்தில் கார்த்தி சுப்புராஜ் ஏன் அப்படி ஒரு யு டர்ன் அடித்தார் என்பது தான் தெரியவில்லை.. அது கதைக்கு எந்தவிதத்தில் தேவைப்படுகிறது என்கிற கேள்வியையும் அப்படி இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கலாமோ என்கிற யூகத்தையுமே கிளப்புகிறது.
மொத்தத்தில் நமது வீட்டில் உள்ள ‘மனிதி’களையும் ‘இறைவி’களையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என உரக்கச்சொன்ன இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பாராட்டித்தான் ஆகவேண்டும்.