தமிழக-கேரளா மாநில எல்லையான குமுளியில் உள்ள பள்ளி ஒன்றில் பி.டி.மாஸ்டராக வேலைபார்க்கும் சத்யராஜ், பள்ளிக்கு அருகே பார் நடத்தும் மைம் கோபியின் மீது போலீசில் புகார் கொடுக்கிறார். பதிலுக்கு மைம் கோபி அவரை பாருக்கு வரவழைத்து தாக்க முயற்சிக்க, சத்யராஜின் மகனான உதயநிதி, மைம் கோபி அன் கோவை அடித்து துவம்சம் செய்கிறார்.. இரண்டே நாட்களில் மைம் கோபி மர்மமான முறையில் கொலைசெய்யப்பட, பழி சத்யராஜின் மேல் விழுகிறது..
இதற்கிடையே வாடகை கொலையாளியான விக்ராந்த், அதே குமுளியில் இருக்கும் நூலகத்தை நடத்தி வரும் பாதர் ராஜேஷை கொல்ல வருகிறார். அதன்பின்னால் மிகப்பெரிய தேச விரோத சதி ஒளிந்திருக்கிறது. இதில் நூலக உதவியாளராக வேலை பார்க்கும் உதயநிதி, தன் தந்தையின் மீதான பழியை துடைக்கவும், விக்ராந்தின் நோக்கத்தை முறியடிக்கவும் என்ன ஸ்டெப் எடுக்கிறார் என்பதை ‘கெத்’தாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
மூன்று படங்களில் காமெடி பண்ணியது போதும் என நினைத்து ஆக்சன் ரூட்டில் அளவான வேகத்தில் கால் வைத்துள்ளார் உதயநிதி.. அவரது இந்த மாறுதலை முழுவதுமாக ஏற்க மனம் மறுத்தாலும், பரவாயில்லையே என்றும் ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்கிறது. ஹேர்ஸ்டைல், காண்டாக்ட் லென்ஸ் என கெட்டப் மாற்றினால் ஆக்சன் ஹீரோ இமேஜ் வந்துவிடும் என இவருக்கு சொல்லிக்கொடுத்த இயக்குனர் திருக்குமரனை நினைத்தால் தான் சிரிப்பு வருகிறது..
சத்யராஜின் ‘கெத்து’ தான் படம் முழுவதும். கொடுத்த வேலையை பிசிறில்லாமல் செய்திருக்கிறார். நாயகி எமி ஜாக்ஸனை என்ன கணக்கில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்கிறார்கள் என்கிற சூட்சுமம் இந்தப்படத்திலும் பிடிபடவில்லை. வசனம் குறைவு என்பதால் வில்லனாக வரும் விக்ராந்தின் வேலை ரொம்பவே ஈஸியாகிவிடுகிறது.
ஹாரிஸின் இசையில் அடுத்தடுத்து உடனுக்குடன் வரும் பாடல்கள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன. இனியும் தேவையில்லாமல் இத்தனை பாடல்கள் எதற்கு உதயநிதி சார்..? இடைவேளைக்கு முன் வரும் க்ளிஷேக்களை தவிர்த்து காதல் கட்சிகளில் புதிதாக யோசித்திருக்கலாமே என தோன்றத்தான் செய்கிறது. மொத்தத்தில் முழுதாக ‘கெத்து’ காட்ட முடியாமல் தடுமாறவே செய்திருக்கிறார்கள்.