டார்லிங் 2 – விமர்சனம்

ஏற்கனவே வெளியான ‘டார்லிங்’ என்கிற ஹிட் லேபிளுடன் ஸ்டுடியோகிரீன் வெளியீடாக எதிர்பார்ப்புடன் வெளியாகிருக்கும் படம் தான் டார்லிங்-2..

கலையரசன், ரமீஸ்ராஜா, காளி வெங்கட் உட்பட ஐந்து நண்பர்கள்.. கலையரசனுக்கு திருமணம் நிச்சயமாகப்போகும் சந்தோஷத்தை கொண்டாட வால்பாறைக்கு ஜாலி பிக்னிக் போகிறார்கள். ஏற்கனவே ரமீஸ்ராஜாவின் தம்பி (அவரும் ரமீஸ்ராஜாதான்) வால்பாறையை சேர்ந்த மாயா என்கிற பெண்ணை காதலித்து, அவரை திருமணம் செய்யமுடியாமல் தற்கொலை கொண்ட ஒரு பிளாஸ்பேக்கும் இருக்கிறது..

அந்த மாயா தான் இப்போது வால்பாறை வந்துள்ள நண்பர்கள் டீமுக்கு உணவு கொண்டுவந்து உபசரிக்கிறார்.. இரவு நேரங்களில் அங்கே பேய் உலாவுவதை கண்டுபிடிக்கும் நண்பர்கள் இருவர், அது இறந்துபோன ரமீஸ்ராஜாவின் தம்பி தான் என்பதையும் அவர் கலையரசன் மீது இறங்கியுள்ளார் என்பதையும் அறிகிறார்கள்.. கூடவே மாயாவும் ஏற்கனவே இறந்துவிட்டார் என்கிற அதிர்ச்சி தகவலும் தெரிய வருகிறது.

இந்தநிலையில் இந்த நண்பர்கள் கூட்டத்தில் கலையரசனை மட்டும் கொல்லப்போவதாக பேய் சொல்ல, அதற்கான காரணமும், கடைசியாக பேயின் உக்கிரத்தை தணிக்க கலையரசன் எடுக்கும் முடிவும் தான் மீதிப்படம்.

நண்பனாக இருந்தாலும் கூட எந்த ஒரு சீரியஸான விஷயத்திலும் எதிராளியின் மனநிலை அறியாமல் விளையாட்டுத்தனமாக இருக்க கூடாது.. அது எவளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை பேய் ரூட்டில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன்.

நண்பர்கள் டீமில் கலையரசன் பாஸ்மார்க் வாங்குகிறார். திக்குவாய் மெட்ராஸ் ஜானியின் நடிப்பு பரவாயில்லை.. காளி வெங்கட் வழக்கம்போல கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக கலாய்க்கிறார். புதுமுகம் ரமீஸ்ராஜாவும் இந்த கதைக்கு பொருந்துகிறார். பாரஸ்ட் அதிகாரியாக வரும் முநீஷ்காந்த் அவ்வப்போது சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

கதாநாயகி மாயா அந்த ஒரு பாடல் காட்சியிலேயே துருதுரு இளமை குறும்பும் வசீகர புன்னகையுமாக மனதை அள்ளுகிறார். பேய்ப்படம் என்றாலே இருட்டு, பங்களா தான் என்றாலும், அதையும் தாண்டி வால்பாறையின் அழகை அள்ளி வந்திருக்கிறது விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு..

நான்கைந்து நண்பர்கள், பிக்னிக், பிரமாண்ட பங்களா, பேய் பிளாஸ்பேக் என ஒரு பேய்ப்படத்துக்கே உண்டான கிளிஷேக்கள் இதிலும் அப்படியே உண்டு.. இதிலிருந்து மாறுபட்டு ஒரு படம் வந்துவிடாதா என்கிற ஆசையுடன் படத்துக்கு வருபவர்களுக்கு, இல்லையில்லை.. பேய்ப்படங்களில் நானும் பத்தோடு பதினொன்று தான் என சொல்லாமல் சொல்லி அனுப்புகிறது இந்த ‘டார்லிங்-2’.

Darling 2Darling2 Tamil Movie ReviewKaali VengatKALAIYARASANMayaSathishStudio Greenடார்லிங்-2