கர்நாடகாவும் கேரளாவும் பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்துவரும் இந்த சூழலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் பக்கத்து ஊருக்கு தண்ணீர் தர மறுக்கும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சற்குணம்.
கிராமத்தில் உள்ள மில்லுக்காரரான லால், பக்கத்து ஊருக்கு குடி தண்ணீர் தர மறுத்து, குளத்தை ஏலத்தில் எடுத்து மீன் வளர்த்து அசுத்தமக்குகிறார். அதனால் பக்கத்து ஊர் மக்கள் பலர் உயிரிழக்கிறார்கள். அதே கிராமத்தை சேர்ந்த அதர்வா, ஒருபக்கம் லாலின் மகள் ஆனந்தியை லவ்வடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் லாலுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்..
தனது மகளின் காதல், ஊர்க்குளம் சம்பந்தமான பிரச்சனை இரண்டிலிருந்தும் அதர்வாவை விலக்க நினைக்கும் லால், இரண்டு ஊருக்கும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக கலவரத்தை உண்டாக்கி அதில் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார். யாருக்கு ஜெயம் என்பது க்ளைமாக்ஸ்.
ஊருக்குள் சிங்கப்பூர் ரிட்டர்ன் என்று சொல்லிக்கொண்டு ‘களவாணி’ப்பயலாக ‘நய்யாண்டி’த்தனம் செய்யும் கேரக்டருக்கு அதர்வா ஒகே தான். ஆனால் கிராமத்து பிரச்சனையில் தன்னந்தனி ஆளாக எந்தவித தீவிரமும் காட்டமுடியாத, ஊருக்கு கட்டுப்படுகிற அவரது கேரக்டருக்கு சண்டிவீரன் என்கிற பெயர் பொருத்தமாக இல்லையே..
மிகப்பெரிய எக்ஸ்பிரசன்கள் காட்டாத அழகு முகம் ஆனந்திக்கு.. அப்பாவித்தனமும் குறும்பும் நிறைந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு.. லால் காட்டும் வில்லத்தனம் பலமுறை பார்த்திருந்தாலும் இந்தக்கதைக்கு அது வலு சேர்க்கவே செய்திருக்கிறது. அருணகிரியின் இசையில் ‘அழுங்குர குலுங்குற’ பாடல் சூப்பர்.
கிராமத்து திருவிழா காட்சிகளும் ஹீரோ, ஹீரோயின் காதல் காட்சிகளும் இயக்குனரின் முந்தைய படங்களின் சாயலிலேயே இருப்பதை தவிர்த்து புதிதாக யோசித்திருக்கலாம். அதர்வாவின் சிங்கப்பூர் ஜெயில் காட்சி தேவையிலாமல் துருத்திக்கொண்டு நிற்கிறதே.. இன்னும் குடிநீருக்காக அடித்துக்கொள்ளும் கிராமங்கள் இருக்கின்றனவா என்ன..? குடிநீர் பிரச்சனைக்காக போராடும் அதர்வாவின் போராட்டம் தீவிரமாக இருந்திருந்தால் சண்டிவீரன் ஜொலித்திருப்பான்.