’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ விமர்சனம்

சிங்கப்பூர் தமிழர்களால் முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் வெளியாகியிருக்கும் ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

நடிகர்கள் : ரியோ ராஜ், ஜோ ஜியோவானி சிங், ஜெனீஷ், குணாலன், நபிஷா ஜுலாலுதின், மூனிலா
இசை : பிரவீன் விஷ்வா மாலிக்
ஒளிப்பதிவு : சலீம் பிலால் ஜித்தேஷ்
இயக்கம் : ஜோ ஜியோவானி சிங்
தயாரிப்பு : ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ்

சிங்கப்பூரில் மருத்துவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை கண்டுபிடிப்பதில் காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ் தீவிரம் காட்டி வருகிறார். மறுபக்கம், எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, அவருடைய அக்கா ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை ஒன்றை சொல்கிறார். அதன்படி, ஆள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் சிக்காமல் எடுத்து வந்தால் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்கிறார். அதன்படி, இருவரும் வெவ்வேறு வீடுகளுக்குள் நுழைய, இருவரில் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்பதும் தொடர் கொலைகளை செய்து வரும் கொலையாளி பிடிபட்டாரா? இல்லையா? என்பதும் தான் படத்தின் கதை என்று நினைத்து பார்த்தால், இறுதியில் அத்தனையும் வெறும் மாயை, என்ற ரீதியில் ஒரு விஷயத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள். அது என்ன என்பது தான் படத்தில் இருக்கும் ஒரே ஒரு சுவாரஸ்யம்.

தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வரும் ரியோ ராஜ், இப்படி ஒரு படத்தில், இதுபோன்ற வேடத்தில் நடித்தது அதிர்ச்சியளித்தாலும், தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்னீஷ், கம்பீரமாக இருந்தாலும், அவருடைய நடிப்பும், வசனங்களும் சிரிக்க வைக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன் அக்கா வேடத்திற்கு பக்காவாக இருக்கிறார். அக்காவாக நடித்தாலும், டூயட், தனி பாடல்கள் என்று திரை முழுவதும் நிரம்பி வழிகிறார்.

சைக்கோவாக நடித்திருக்கும் குணாலன், வேடத்திற்கு ஏற்ற வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ஜோ ஜியோவானி சிங், வெளிநாட்டு நடிகர் போல் இருந்தாலும், எம்.ஜி.ஆர் ஸ்டைல் மூலம் குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் ஜித்தேஷ் கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, இதுவரை பார்க்காத எளிமையான சிங்கப்பூரை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

படத்தின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ஜோ ஜியோவானி சிங், கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு சாதாரண கதையை எப்படி எல்லாம் குழப்பி சொல்ல முடியுமோ அப்படி எல்லாம் சொல்லியிருப்பவர், முழு படத்தையும் ஏதோ விளையாட்டாகவே இயக்கியிருக்கிறார்.

இது காமெடி படமா? அல்லது காமெடியாக செய்த சீரியஸ் படமா? என்று பார்வையாளர்களுக்கு புரியாதபடி படத்தை இயக்கியிருக்கும் ஜோ ஜியோவானி சிங், படத்தில் என்ன நடக்கிறது, கதை எங்கு பயணிக்கிறது, என்பதை தெளிவாக சொல்லவில்லை என்றாலும், இறுதியில் ஒரு திருப்புமுனையை வைத்து ரசிகரகளை திகைக்க வைத்துவிடுவதோடு, சிரிக்கவும் வைக்கிறார்.

மொத்தத்தில், எந்த ரக பாணி படம் என்றே தெரியாதவாறு பயணித்து, பல இடங்களில் கடுப்பேற்றினாலும், சில இடங்களில் சிரிக்க வைத்து நம்மை ஆறுதலடைய செய்கிறது இந்த ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’.

ரேட்டிங் 2.5/5

Broken Script Movie ReviewJoe Giyovani SinghRio RajTamil Movie Broken Script Review