பெங்களூர் நாட்கள் – விமர்சனம்


மலையாளத்தில் இருந்து மீண்டும் ஒரு ‘பெங்களூர் டேய்ஸ்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை தமிழுக்கு ரீமேக்காக அழைத்து வந்திருக்கிறார்கள். ஏற்கனவே மலையாளத்தில் இதன் ஒரிஜினலை பார்த்தவர்களையும், இப்போது புதிதாக பார்ப்பவர்களையும் ஒருசேர இந்தப்படம் திருப்தி பண்ணியிருக்கிறதா..? பார்க்கலாம்.

சின்னவயதில் இருந்தே நண்பர்களாக பழகும் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவருக்கும் பெங்களூருக்கு ஜாலி ட்ரிப் அடிக்கவேண்டும் என்பது கனவு. பின்னாளில் அது ஸ்ரீதிவ்யாவுக்கு பெங்களூர் மாப்பிள்ளை ராணா மூலமும் பாபி சிம்ஹாவுக்கு சாப்ட்வேர் வேலை மூலமாகவும் ஆர்யாவுக்கு ரேசிங் பைக் மெக்கானிக்காகவும் ஒரேசமயத்தில் பெங்களூர் செல்லும் வாய்ப்பை தருகிறது.

கூடவே மாற்றுத்திறனாளி பார்வதி மீது ஆர்யாவுக்கு காதலையும், அழகுப்பெண்களில் தனக்கு மனைவியாகப்போகும் ஒருத்தியை பெங்களூரில் தேடும் வாய்ப்பை பாபி சிம்ஹாவுக்கும் தருகிறது.. இந்த மூவரின் வாழ்க்கையிலும் சுகம், துக்கம் என இந்த ‘பெங்களூர் நாட்கள்’ கொண்டுவரும் மாற்றங்கள் தான் மொத்தப்படமும்

அத்தை, பையன், மாமா பொண்ணு உறவுமுறை உள்ள மூவர், உறவுகள் என்கிற நிலையை தாண்டி தங்களுக்குள் அருமையான ஆரோக்கியமான நட்பை பேண முடியும் என்பதை ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரின் கதாபாத்திரங்கள் மூலமாக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.. ராணா-ஸ்ரீதிவ்யா வாழ்க்கையின் இறுக்கம் படிப்படியாக தளர்வதையும், ஆர்யாவுக்குள் இருக்கும் இரும்பு மனிதன் பார்வதியின் காதலால் கசிந்து உருகுவதையும் வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்யாவும் ராணாவும் தங்களது இறுக்கமான சுபாவத்தை இருவேறு நிலைகளாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நல்ல தோழியாக ஸ்ரீதிவ்யா மிளிர்கிறார். ராய் லட்சுமியின் மீது பாபி சிம்ஹாவுக்கு ஏற்படும் காதல் தான் படத்தின் பாதி காமெடி எபிசொட் ஆக மாறியிருக்கிறது.. இடைவேளைக்குப்பின் பெங்களூருக்கு வரும் பாபியின் அம்மா சரண்யா தன்வசப்படுத்தி கொள்கிறார். குறைந்த நிமிடங்களே வந்தாலும் சமந்தாவின் கதாபாத்திரம் போனஸ் இனிப்பு தான். பிரகாஷ்ராஜ், ராய் லட்சுமி, எம்.எஸ்.பாஸ்கர், சன் டிவி ராஜா, ஸ்ரீரஞ்சனி என எல்லோரும் இருப்பது தெரியாமல் இயல்பாக கதைக்குள் நுழைந்து வெளிப்படுகிறார்கள்.

கோபி சுந்தரின் இசையில் திருமண வீட்டுப்பாடல் இளைஞர்களை மட்டுமல்ல, குட்டீஸ்களையும் கவரும். குகனின் ஒளிப்பதிவு பெங்களூரின் அழகை அப்படி அள்ளி கண்களில் ஒற்றுகிறது. அழகான கள்ளம் கபடமில்லா நட்பையும், அது நண்பர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்துவதையும் காட்சிக்கு காட்சி அழகியல் உணர்வுடன் சொல்லிக்கொண்டே போகிறார் இயக்குனர் பொம்மரிலு பாஸ்கர். இளைஞர்கள் மட்டுமல்ல.. இது நண்பர்கள், உறவுகள் என அனைவருமே பார்க்கவேண்டிய ஒரு பீல்குட் படம் தான்.

AryaBabi SimhaBangalore Naatkal ReviewParvathyRaai LakshmiRaana DuggupathiSamanthaSaranya PonvannanSri Divya