’பாபா பிளாக் ஷீப்’ விமர்சனம்

நடிகர்கள் : அபிராமி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், விஜே விக்னேஷ்காந்த், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சேட்டை ஷெரிப், ராம் நிஷாந்த், குட்டி வினோ
இசை : சந்தோஷ் தயாநிதி
ஒளிப்பதிவு : சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்
இயக்கம் : ராஜ்மோகன் ஆறுமுகம்
தயாரிப்பு : ரோமியோ பிக்சர்ஸ் – ராகுல்

அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கத்தில், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், போஸ் வெங்கட், அம்மு அபிராமி, அபிராமி, வினோதினி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

ஒரே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இதற்கிடையே கடைசி பெஞ்ச் யாருக்கு என்பதிலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இப்படி எதற்கு எடுத்தாலும் மோதிக்கொள்ளும் மாணவர்களின் மனநிலை மாற்றுவதற்காக பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தலைவருக்கான தேர்தல், தேர்வு, அறிவியல் கண்காட்சி என்ற மூன்று விஷயங்களை நடத்த முடிவு செய்கிறது. ஆனால், மாணவர்களோ அந்த மூன்றையும் தங்களது போட்டிகளாக பயன்படுத்தி, அதிலும் மோதிக்கொள்கிறார்கள். அதே சமயம், மாணவர்கள் கையில் ஒரு கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில், மாணவர் ஒருவர் தனக்கு வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருக்கிறார். பெயர், வகுப்பு உள்ளிட்ட எந்த தகவல்களும் இல்லாத அந்த கடிதம் எழுதியது யார்? என்பதை கண்டுபிடித்து, அவருடைய தற்கொலை முயற்சியை தடுக்க நினைக்கும் மாணவர்கள், அதில் வெற்றி பெற்றார்களா? இல்லையா?, கடைசி பெஞ்ச் மோதல் என்னவானது? ஆகிய கேள்விகளுக்கு விடைதான் படத்தின் மீதிக்கதை.

பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சேட்டை ஷெரிப், ராம் நிஷாந்த், குட்டி வினோ ஆகியோரை பள்ளி மாணவர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதிர்ச்சியடைந்த இவர்களை பள்ளி மாணவர்கள் கதாபாத்திரத்தில் திணித்தது போல் இருக்கிறது.

பள்ளி ஆசிரியர்களாக நடித்திருக்கும் மதுரை முத்து, போஸ் வெங்கட், வினோதினி மற்றும் அபிராமி ஆகியோர் பெரிதாக சொல்லும்படி எதுவும் செய்யவில்லை. ஒரு சில காட்சிகளை தலைக்காட்டுவதோடு அவர்களது வேலை முடிந்து போகிறது.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், கதைக்கு ஏற்றபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகமாகவும் பின்னணி இசை மிக சுமார் ரகமாகவும் இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் யுடியுப் பிரபலம் ராஜ்மோகன் ஆறுமுகம், யுடியுப் வடிவிலான ஒரு வீடியோ தொகுப்பை திரைப்படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார்.

2k பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்கிறேன், என்ற பெயரில் வழக்கமாக சொல்லப்படும் அட்வைஸையே அதே பழைய பாணியில் சொல்லியிருப்பது படத்தை தொய்வடைய செய்கிறது.

பள்ளி மாணவர்களை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களில் வழக்கமாக சொல்லப்படும் அதே கான்சப்ட்டை அதே பழைய பாணியில் சொல்லியிருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்தாலும், மாணவர்களின் தற்கொலை தொடர்பாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு விஷயம் மட்டுமே பாராட்டும்படி இருக்கிறது.

அதிகமாக அட்வைஸ் சொன்னால் படம் போரடித்து விடும் என்று காமெடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அவை சமூக வலைதளப் பக்கங்களில் இடம்பெற்ற வீடியோக்கள் போலவே இருப்பது, பேசி பேசியே காட்சிகளை கடத்துவது போன்றவை படம் பார்ப்பவர்களின் பொருமையை சோதிக்கிறது.

ரேட்டிங் 2.7/5

baba black sheep movie reviewDirector Rajmohan Arumugamkollywood movie reviewtamil movie baba black sheep review