திருமணம் நிச்சயமான பின்னும் கூட தனது கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்கள், திருமண அச்சாரம் போட்டபின், கடைசி நேரத்தில் பெற்றோரை தவிக்கவிட்டு, வீட்டை விட்டு ஓடும் பெண்கள் இவர்களை எல்லாம் தயவு தாட்சண்யம் பாராமல் சுட்டுத்தள்ளுகிறார் சப் இன்ஸ்பெக்டரான கணேஷ் வெங்கட்ராம்.
அந்த சர்ச்சையில் கொடைக்கானலுக்கு மாற்றலாகும் கணேஷ் வெங்கட்ராம் அங்கே தனது காதல் கணவருடன் குடியிருக்கும் பூனம் கவுரையும் நல்லவர் போல நடித்து கொல்ல முயற்சிக்கிறார். அமைதியான நல்ல பெண்ணான அவரை கொல்ல முயற்சிக்க காரணமாக, கணேஷ் வெங்கட்ராமின் பிளாஸ்பேக் விரிகிறது. பூனம் கவுரின் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.
ஆரம்பத்தில் தப்பு பண்ணுகிறவர்களை போட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி படம் என்றதுமே ஒரு சுவராஸ்யம் வந்து ஓட்டிக் கொள்வது உண்மை.. ஆனால் கொடைக்கானலுக்கு கதை மாறியதும் பாதையும் மாறி ஆரம்பகட்ட சுவராஸ்யம் அடிபட்டு போய் விடுகிறது.
கணேஷ் வெங்கட்ராமுக்கு போலீஸ் யூனிபார்ம் கச்சிதமாக பொருந்தும் என்பதைத்தான் நாம் பல படங்களில் பார்த்துவிட்டோமே.. அதில் எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால் அவரது நல்ல கேரக்டரை தேவையில்லாமல் சைக்கோ மாதிரி காட்டியிருக்கத் தான் வேண்டுமா..?
திகில் படத்திற்கேற்ற உணர்வுகளை சரியாக பிரதிபலித்திருக்கிறார் பூனம் கவுர். அவரது சுயநல கதாபாத்திரத்தின் மூலம் திருமண நேரத்தில் வீட்டைவிட்டும் ஓடும் பெண்களின் குடும்பங்கள் என்ன கதிக்கு ஆளாகின்றன என்பதை கொஞ்சம் சாட்டையடியாகவே சொல்லியிருகிறார்கள்.
பூனம் கவுரின் காதல் கணவராக வரும் சைமன் அளந்தெடுத்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பூனமின் அப்பாவாக வருபவர் தனது நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார்.. படம் பார்க்கும் பெண்களில் ஒரு சிலராவது திருமணத்திற்கு ‘அச்சாரம்’ போட்டபின் வீட்டைவிட்டு ஓடிப்போகும் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்களேயானால் அதுதான் இந்தப்படத்திற்கான வெற்றி. இயக்குனர் மோகன் கிருஷ்ணாவுக்கான வெற்றி.